சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (செப். 11) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 16-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சிலபகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.
செப். 10-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், வெங்கூர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., திருப்பாலப்பந்தல், மாதம்பூண்டி ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், மங்களபுரம், புதுசத்திரம், சேலம் மாவட்டம் எடப்பாடி, சங்ககிரி, கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் அதிகபட்சம் 65 கி.மீ. வேகம் வரை சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.