உடுமலை சங்கர் கொலை வழக்கில், நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு, உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் மற்றும் கவுசல்யா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த கவுசல்யாவின் பெற்றோர், சங்கரை கூலிப்படையினரை ஏவி கொலை செய்தனர்.
இதில் கவுசல்யா படுகாயமடைந்தார். இந்த கொலைவழக்கில் கவுசல்யாவின் பெற்றோர் உட்பட 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கின் தீர்ப்பு இன்று (12-12-17) வெளியானது. கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 11 பேரில் 8 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், 'தி இந்து' தமிழ் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், அவர் கூறியது:
“சமீபகாலமாக தமிழ்நாட்டில் ஜாதியின் பெயரில் ஆணவக் கொலைகள் அதிகம் நடந்து வருகிறது. இதுபோன்ற சூழலில், திருப்பூர் நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
எதிர்காலத்தில் ஆணவக்கொலைகள் நடக்காமல் தடுப்பதற்கு இந்த தீர்ப்பு வழிவகுக்கும் என நம்புகிறேன். ஆண், பெண் பாகுபாடின்றி சங்கர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும்.
தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில், ஆணவக்கொலைகள் நடைபெறுவது கவலைக்குரியது மட்டுமின்றி கண்டனத்திற்குரியதும் கூட.”
இவ்வாறு அவர் கூறினார்.