பொன்னேரி: தமிழ்நாடு முழுவதும் கடற்கரையோரங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணிக்காக பழவேற்காடு கடற்கரையில் நேற்று முன்தினம் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதன்படி ஒரு கி.மீ. தூரத்துக்கு 9,300 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை சார்பில் ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்காக நாட்டு நலப்பணி திட்ட தினமான வரும் 24-ம் தேதி பனை விதைகள் நடவு செய்யும் பணி நடைபெற உள்ளது.
இதையொட்டி நேற்று முன்தினம் பொன்னேரி அருகே உள்ள பழவேற்காடு கடற்கரையில் பனை விதை நடும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விதைகளை நடவு செய்யும்போது, ஒரு பனை விதைக்கும் இன்னொரு பனை விதைக்கும் ஒரு மீட்டர் தூரத்துக்கு இடைவெளி இருக்க வேண்டும், பனை விதைகளை எப்படி குறுக்கும் நெடுக்குமாக நட வேண்டும், விதையை எந்த நிலையில் குழியில் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் செய்முறை விளக்கங்களுடன் செய்து காண்பிக்கப்பட்டது.
இதில், செங்குன்றத்தில் உள்ள தனியார் பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஒரு கி.மீ. தூரத்துக்கு 9,300 பனை விதைகளை நடவு செய்தனர்.
இந்த ஒத்திகை நிகழ்வுகளில், பனை ஆர்வலர் கார்த்திக் நாராயணன், கிரீன்நீடா அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு, இணை ஒருங்கிணைப்பாளர் ரபிக் முகமது, தன்னார்வலர்கள் பாலகிருஷ்ணன், தங்கமுத்து, முனீஸ்வரன், ராஜ்குமார், ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.