தமிழகம்

சென்னை மாநகராட்சி சார்பில் ‘தூய்மையான சென்னை' விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் ‘தூய்மையான சென்னை' விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று 4 இடங்களில் நடைபெற்றது.

தமிழ்நாட்டின் தலைநகராக சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22-ம் நாளை நினைவூட்டும் வகையில், கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 22-ம்தேதி ரிப்பன் மாளிகை வளாகத்தில் இந்த ஆண்டு சென்னை தின கொண்டாட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதன் தொடர்ச்சியாக மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புகைப்பட கண்காட்சி, இசைக் கச்சேரி, கடற்கரையில் திரைப்படங்களை காட்சிப்படுத்துதல், மாரத்தான், உணவுத் திருவிழா, பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், குதிரைவண்டி சவாரி போன்ற பல்வேறுநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, ‘தூய்மையான சென்னை' என்ற கருப்பொருள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி சென்னை கிண்டி கத்திப்பாரா சதுக்கம், அண்ணாநகர் டவர் பூங்கா, தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம், கிழக்கு கடற்கரை சாலை - விஜிபி ஆகிய 4 இடங்களிலிருந்து நேற்று காலை 6 மணிக்கு சைக்கிள் பேரணி தொடங்கியது. அவர்கள் அனைவரும் ரிப்பன் மாளிகை வந்து சேர்ந்தனர்.

அங்கு சைக்கிள் பேரணியில் பங்கேற்றவர்கள் உருவாக்கிய ‘Litter free Chennai' என்ற எழுத்துவடிவத்தில் மேயர் ஆர்.பிரியாவும் பங்கேற்றார். சைக்கிள் பேரணியில் 600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்த வி ஆர் தி சென்னை சைக்கிளிஸ்ட் குரூப்-ன் தலைவர் பெலிக்ஸ் ஜான் பதக்கங்களை வழங்கினார்.

சைக்கிள் பேரணியில் பங்கேற்றவர்களையும், சென்னை தினக்கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவரையும் மேயர் பிரியா பாராட்டி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி இணை ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT