சிவகங்கை: ‘ஜி-20 மாநாட்டுக்கு இண்டியா கூட்டணியிலிருந்து வேறும் யாரும் செல்லாதபோது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டும் சென்றது ஏன்?’ என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சனாதனத்தை ஒழிக்க திமுக என்ன செய்தது? காமராஜர், ஜெயலலிதா கூட ஆதி திராவிடர், பழங்குடியினத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்குப் பதவிகளை வழங்கி சனாதனத்தை ஒழிக்க முன்முயற்சி எடுத்தனர். சனாதன வார்த்தையையே ஒழிக்க முடியவில்லை.
அதை எப்படி ஒழிக்க முடியும். உதயநிதி சென்னது போல் சனாதனம் ஒரு கிருமிதான். திமுகவே சனாதன கட்சிதான். ஜி-20 மாநாட்டுக்கு இண்டியா கூட்டணியிலிருந்து வேறு யாரும் செல்லாதபோது, மு.க.ஸ்டாலின் மட்டும் சென்றது ஏன்? மகன் சனாதனத்தை எதிர்ப்பார். தந்தை சென்று மோடியிடம் சமாதானம் செய்வாரா? சனாதன தலைவரே மோடி தான். அவருடன் சேர்ந்து ஏன் நிற்க வேண்டும்?
ஜனநாயக அழிப்பின் தொடக்கமே காங்கிரஸ் தான். ஜனநாயகத்தை பற்றி பேச ப.சிதம்பரத்துக்கு என்ன தகுதியுள்ளது? புதிய கல்விக் கொள்கையானது நமது குழந்தைகளுக்கு எழுதி வைக்கக் கூடிய மரண சாசனமாகும். இவ்வாறு அவர் கூறினார்.