தமிழகம்

தருமபுரி | ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு

எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தம்மனம்பட்டி கிராமத்தில் ஏரியில் மீன்பிடிக்க சென்ற போது ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நார்த்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தம்மனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனகசபாபதி. இவர் மனைவி சரஸ்வதி. இவர்களின் குழந்தைகள் சஞ்சனாஸ்ரீ (7), மோனிகாஸ்ரீ (5), தமிழ் இனியன் (3) ஆகியோர் ஆவர். ஞாயிற்றுக்கிழமை (செப். 10) அன்று கனகசபாபதியும், அவர் மனைவியும் அருகில் உள்ள விவசாய நிலத்தில் வேளாண் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், கனகசபாபதியின் குழந்தைகள் 3 பேரும் சைக்கிள் மூலம் அருகில் உள்ள தம்மம்பட்டி ஏரிக்கு சென்றுள்ளனர். அங்கு சிறுவன் இனியனை ஏரிக்கரையில் அமர வைத்துவிட்டு சிறுமிகள் இருவரும் ஏரிக்குள் இறங்கி மீன் பிடிக்க முயன்றுள்ளனர்.

அப்போது சேறு நிறைந்த பகுதிக்கு சென்ற சிறுமிகள் இருவரும் எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நீண்ட நேரமாக குழந்தைகள் வீட்டில் இல்லாததை அறிந்த பெற்றோர் தேடத் தொடங்கினர். அப்போது சிறுவன் இனியன் ஏரிக்கரையில் அழுதபடி இருந்ததைக் கண்டு விசாரித்த போது சிறுமிகள் தண்ணீருக்குள் மூழ்கியது தெரியவந்தது. உடனே அந்தப் பகுதியில் இருந்தவர்கள் ஏரிக்குள் இறங்கி தேடிய போது சிறுமிகள் சடலமாக மீட்கப்பட்டனர்.

தகவல் அறிந்த அதியமான்கோட்டை காவல் துறையினர் சிறுமிகளின் சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT