சென்னை: கடலூர் மாவட்டம் மருதத்தூர் கிராமத்தில், கட்டிட மேற்கூரை விழுந்த விபத்தில் பலியான சிறுமி சுதந்திரதேவி குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சுதந்திரதேவியின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மருதத்தூர் கிராமத்தில் உள்ள கோயிலில் இன்று (செப்.10) காலை கும்பாபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள கட்டிடத்தின் வெளிப்புற மேற்கூரை எதிர்பாராதவிதமாக ஸ்ரீமுஷ்ணம் வட்டம், காவனூர் கிராமத்தைச் சேர்ந்த சுதந்திரதேவி (15) என்பவர் மீது இடிந்து விழுந்ததில், அவருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.
உயிரிழந்த சுதந்திரதேவியின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன், என்று முதல்வர் கூறியுள்ளார்.