சீரமைக்கப்பட உள்ள மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தின் மாதிரி தோற்றங்கள் 
தமிழகம்

எஸ்கலேட்டர் லிஃப்ட் வசதியுடன் உருமாறப் போகும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம்

செய்திப்பிரிவு

கோவை: வரலாற்று முக்கியத்துவமும், பழமையும் வாய்ந்த கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் கடந்த 1873 ஆகஸ்ட் 31-ம் தேதி தொடங்கப்பட்டது.

நீலகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், நீலகிரி மலை ரயிலில் பயணிக்க பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், நாட்டின் பல்வேறு மாநில சுற்றுலா பயணிகள் இந்த ரயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். எனவே, இங்குள்ள வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.

இந்நிலையில், சேலம் ரயில்வே கோட்டத்தில் அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட உள்ள 15 ரயில் நிலையங்களில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையமும் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.

இதன் மூலம் ரயில் நிலையத்தில் மேம்படுத்தப்பட உள்ள வசதிகள் குறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பயணிகள் வசதிக்காக மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் அண்மையில் புதிதாக பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகம் திறக்கப்பட்டது. இங்கு பயணிகள் முன்பதிவு டிக்கெட்டுகள், முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் என இரண்டையும் பெற்றுக்கொள்ளலாம்.

இந்நிலையில், அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் ரூ.14.80 கோடியில் இந்த ரயில் நிலையத்தை மேம்படுத்தவும், புனரமைக்கவும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ரயில் நிலையத்துக்கு நெருக்கடியில்லாமல் வாகனங்கள் வந்து செல்லும் வகையில் பாதைகள் அகலப்படுத்தப்பட உள்ளன.

வாகனங்கள் உள்ளே வரவும், வெளியேறவும் வழிகள் உருவாக்கப்பட உள்ளன. பயணிகள் நடந்துசெல்ல தனியாக நடை பாதைகள் ஏற்படுத்தப் படும். இருசக்கர, நான்குசக்கர வாகனங்கள் நிறுத்துமிட வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. பிரதான நுழைவு வாயிலின் முகப்பு தோற்றம் மேம்படுத்தப்படும்.

நடை மேடையில் ரயில் நிற்கும்போது, பெட்டிகளின் எண்களை தெரிவிக்கும் அறிவிப்பு பலகைகள் பொருத்தப்படும். இது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். கூடுதலாக நடைமேடை நிழற்கூரைகள் ஏற்படுத்தப்படும். பழைய மேற்கூரைகள் பழுதுபார்க்கப் படும். நடை மேம் பாலத்தை எளிதில் பயணிகள் அணுக ஏதுவாக மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் வசதி ஏற்படுத்தப்படும்.

பயணிகள் பாதுகாப்புக்காக ரயில்நிலைய வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். நடைமேடைகள், கழிப்பறைகள், முன்பதிவு மையங்களை மாற்றுத்திறனாளி பயணிகள் அணுக வசதியாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளங்கள் ஏற்படுத்தப்படும். குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் வகையிலும், அதிக ஒளியை அளிக்கவும் ரயில் நிலையத்தின் அனைத்து இடங்களிலும் எல்இடி விளக்குகள் பொருத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT