தமிழகம்

போலீஸாருக்கான மல்யுத்த போட்டி: காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அளவில் நடைபெற்றுவரும் போலீஸாருக்கான மல்யுத்த போட்டியை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று தொடங்கி வைத்தார்.

63-வது தமிழ்நாடு காவல்மண்டலங்களுக்கு இடையேயான மல்யுத்த (மல்யுத்த கிளஸ்டர்-2023) போட்டி சென்னை புதுப்பேட்டையில் உள்ள ராஜரத்தினம்மைதானத்தில் நேற்று காலை தொடங்கியது. இப்போட்டியை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில், சென்னை பெருநகர காவல்துறை, ஆவடி,தாம்பரம் காவல் ஆணையரகங்கள், தமிழக காவல்துறையின் வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், தமிழ்நாடு ஆயுதப்படை, தமிழ்நாடு கமாண்டோ படை என 9 அணிகள் கலந்து கொண்டுஉள்ளன.

மல்யுத்தம், கை மல்யுத்தம், பளுதூக்குதல், உடல் அழகு (பாடி பில்டிங்), வளு தூக்குதல், குத்துச்சண்டை, கபடி ஆகிய 7 பிரிவுகளில் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் 9 மண்டலங்களிலிருந்தும் 28 காவல் அதிகாரிகள் உட்பட சுமார் 652 காவல் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இப்போட்டியில் வெற்றி பெறும் தமிழ்நாடு காவல் விளையாட்டு வீரர்கள், தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிக்கான சோதனை தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இப்போட்டியானது ராஜரத்தினம் மைதானம்மற்றும் சென்னை நேரு விளையாட்டரங்குகளில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா இன்று நடைபெறுகிறது.

போட்டியின் தொடக்க விழாவில் காவல் இணை ஆணையர்கள் கயல்விழி (தலைமையிடம்), துணை ஆணையர்கள் தேஷ்முக் சேகர் சஞ்சய் (திருவல்லிக்கேணி), ராதாகிருஷ்ணன் (தலைமையிடம்), சீனிவாசன் (நிர்வாகம்), ராதாகிருஷ்ணன் (ஆயுதப்படை), கோபால் (மோட்டார் வாகனப்பிரிவு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT