சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமரச தீர்வு மைய கட்டிடம் மற்றும் தமிழகம், புதுச்சேரியில் 120 தாலுகாக்களில் அமைக்கப்பட்டுள்ள சமரச துணை மையங்களை உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தொடங்கி வைத்தார். அருகில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பலர் உள்ளனர். படங்கள்: ம.பிரபு 
தமிழகம்

சமரச தீர்வு மைய செயல்பாடுகளில் இந்தியாவிலேயே சென்னை உயர் நீதிமன்றம் முன்னோடி: உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.கே.கவுல் பாராட்டு

செய்திப்பிரிவு

சமரச தீர்வு மைய செயல்பாடுகளில் இந்தியாவிலேயே சென்னை உயர் நீதிமன்றம் முன்னோடியாக திகழ்கிறது என உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.கே.கவுல் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு சமரச தீர்வு மையத்துக்கான புதிய கட்டிடம் திறப்பு விழா மற்றும்தமிழகம், புதுச்சேரியில் 120 தாலுகாக்களில் அமைக்கப்பட்டுள்ள சமரச துணை மையங்களின் தொடக்க விழா நேற்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு சமரச தீர்வு மையக் கமிட்டியின் தலைவரும், உயர் நீதிமன்ற நீதிபதியுமான ஆர்.மகாதேவன் வரவேற்றுப் பேசினார்.

விழாவுக்கு தலைமை வகித்துசென்னை உயர் நீதிமன்ற தலைமைநீதிபதி எஸ்.வி,கங்காபுர்வாலா பேசும்போது, “தமிழகத்தில் தொடங்கப்பட்ட சமரச தீர்வு மையங்கள் தற்போது நாடு முழுவதும் ஆலமரம் போல வேரூன்றிஉள்ளது. சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பலன் அளிக்கும் விதமாக இந்த மையங்களின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும். அதற்கேற்ப சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள தமிழ்நாடு சமரச தீர்வு மையமும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடைகோடி தாலுகாவில் உள்ளதுணை மையங்களும் அதிநவீனதகவல் தொழில்நுட்ப வசதிகளின்மூலமாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்க வேண்டுமென்பதே இந்தமையங்களின் நோக்கம். இந்த முயற்சி பாராட்டுக்குரியது” என்றார்.

புதிய கட்டிடத்தை திறந்து வைத்தும், தாலுகா துணை மையங்களை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தும் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.கே.கவுல் பேசும்போது, “நீதிமன்றங்களில் வழக்காடிகள் தங்களின் விருப்பத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. ஆனால் சமரச தீர்வு மையங்களில் அது சாத்தியம். சமரச தீர்வு என்பது சிறந்த நடைமுறை. இங்கு குடும்ப பிரச்சினைகள் மட்டுமின்றி வணிக ரீதியிலான பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உடனடி தீர்வு காணப்படுகிறது. சமரச தீர்வு மைய செயல்பாடுகளில் இந்தியாவிலேயே சென்னை உயர் நீதிமன்றம் முன்னோடியாக திகழ்கிறது” எனப் பாராட்டினார்.

விழாவி்ல் பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசும்போது, “இந்த புதியகட்டிடம் நீதிமன்றம் என்ற உணர்வை நிச்சயமாக பொதுமக்களுக்கு ஏற்படுத்தாது. மாறாக அவர்களின் குறைகளைக் களையும் இடமாக திகழும். எங்கள் முன்பாகநிலுவையில் இருந்த 5 கோடி வழக்குகளுக்கு உடனடி தீர்வு காண்பது சாத்தியமற்றது. ஆனால்சமரச தீர்வு மூலமாக அந்த வழக்குகளுக்கும் தீர்வு கண்டுள்ளோம். இதில் சிவில் வழக்குகள் மட்டுமின்றி கிரிமினல் வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றங்கள் ரோல்ஸ் ராய்ஸ் காரைப் போன்றது. இந்த சமரசமையங்கள் எரிபொருள் சிக்கனம்கொண்ட மாருதி காரைப் போன்றதுஎன்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்” என்றார்.

இந்நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உட்பட நீதிபதிகள் பங்கேற்றனர். உயர் நீதிமன்றநீதிபதி டி.கிருஷ்ணகுமார் நன்றி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT