தமிழகம்

ஆட்சேபகரமான கருத்துகளுடன் சுவரொட்டி ஒட்டினால் நடவடிக்கை: கோவை மாநகர காவல் துறை எச்சரிக்கை

செய்திப்பிரிவு

கோவை: கோவை மாநகரில் ஆட்சேபகரமான கருத்துகளுடன் சுவரொட்டி ஒட்டினால் தொடர்புடையவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாநகரின் சில பகுதிகளில் அரசியல் கட்சிகள், மதம் மற்றும் இதர அமைப்புகள் சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஒரு கட்சி அல்லது அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிர்தரப்பினரின் கருத்துகளுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டும்போது,

சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆட்சேபகரமான கருத்துகள் இருக்கும் பட்சத்தில், சுவரொட்டியில் இடம் பெற்றுள்ள பொறுப்பாளர்கள், அச்சடித்த அச்சகத்தின் உரிமையாளர் மீது காவல்துறை சார்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆட்சேபகரமான அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் உள்ள கருத்துகளுடன் கூடிய வாசகங்கள் அல்லது சித்திரங்களுடன் கூடிய சுவரொட்டியை அச்சிடுவதற்கு எவரேனும் தங்களை அணுகினால், அது குறித்து சம்பந்தப்பட்ட அச்சக உரிமையாளர் மற்றும் பொறுப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்க வேண்டும்.

கோவை மாநகரில் அச்சடிக்கப்படும் சுவரொட்டிகள் அனைத்திலும் தொடர்புடைய அச்சகத்தின் பெயர் மற்றும் உரிமம் எண் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். அவ்வாறு குறிப்பிடாத அச்சகத்தின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT