தமிழக - ஆந்திர எல்லையோரம் அமைந்துள்ள காளிக்கோயில் பகுதியில் பெய்த தொடர் மழையால் காய்ந்த நிலக்கடலை செடிகள் மீண்டும் புத்துயிர் பெற்று பூக்கள் பூத்துள்ளன. 
தமிழகம்

கிருஷ்ணகிரியில் தொடர் மழையால் புத்துயிர் பெற்ற நிலக்கடலை செடிகள்

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், காய்ந்த நிலையில் காணப்பட்ட நிலக்கடலை செடிகள் மீண்டும் புத்துயிர் பெற்று பூக்கள் விடத் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானாவாரியில் நிலக்கடலை 14 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. நிலக்கடலை சாகுபடியில் பர்கூர், ஊத்தங்கரை, ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி வட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈடுபடுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் பருவமழையை பொறுத்து 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கடலை உற்பத்தி செய்யப்படுகிறது.

கடலை எண்ணெய் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக, நிலக்கடலையின் தேவையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக நிகழாண்டில் நிலக்கடலையை அதிகளவில் விதைத்தனர். ஆனால் போதிய அளவு மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதாலும் நிலக்கடலை செடிகளில் பூக்கள், இலைகள் கருகின.

நிலக் கடலை செடிகளை காக்க விவசாயிகள் சிலர் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து பாய்ச்சும் நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், காய்ந்து கருகி வந்த நிலக் கடலை செடிகள் அனைத்தும் புத்துயிர் பெற்று, மீண்டும் செழித்து வளர்ந்து, பூக்கள் விட தொடங்கி உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து குரு பரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறும்போது, மழையை மட்டுமே நம்பி நிலக் கடலை, துவரை உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் விதைக்கப்படுகிறது. உரிய நேரத்தில் பருவ மழை பெய்யாமல், வெயிலின் தாக்கம் காரணமாக அனைத்து பயிர்களும் காய்ந்தன. விளைச்சல் பாதிக்கப்பட்டால் வருவாய் இழப்பு மட்டுமின்றி கடலை எண்ணெய் விலையும் உயரும் நிலை காணப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில், திடீரென பெய்த மழையால் நிலக்கடலை, துவரை உள்ளிட்ட செடிகள் செழித்து வளரத் தொடங்கி, பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இதனால் ஓரளவுக்கு மகசூலும், வருவாயும் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது, என்றனர். கடலை விளைச்சல் பாதிக்கப்பட்டால் வருவாய் இழப்பு மட்டுமின்றி கடலை எண்ணெய் விலையும் உயரும் நிலை காணப்பட்டது.

SCROLL FOR NEXT