தமிழகம்

இஸ்கான் கோயிலில் கிருஷ்ணருக்கு 1,008 வகை அபிஷேகம்

செய்திப்பிரிவு

சென்னை: ஜென்மாஷ்டமி விழாவையொட்டி இஸ்கான் கோயிலில் கிருஷ்ணருக்கு 1,008 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் கோயிலில் நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று, காலை  ராதா கிருஷ்ணர் கோயிலில் பஜனை நிகழ்ச்சிகளுடன், ஸ்ரீகிருஷ்ணருக்கு பன்னீர், பூ, பழம், இளநீர், பஞ்சாமிர்தம் உட்பட 1,008 வகையான மகா அபிஷேகம் நடந்தது.

இதைத்தொடர்ந்து, பிருந்தாவன், மதுராவில் இருந்து கொண்டு வரப்பட்ட மஞ்சள், நீலம், பச்சை, ஊதா ஆகிய நிறங்களால் ஆன உடைகளால் கிருஷ்ணர், ராதை, லலிதா, விசாகா அலங்கரிப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நள்ளிரவு 1 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

எச்.எச்.பானு சுவாமி மகராஜ் மற்றும் ஜயபதக சுவாமி மகராஜின் பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் கிருஷ்ணர் கண்காட்சி நடைபெற்றது.

மேலும், பகவத் கீதை வகுப்பில் பங்கேற்பதற்கான சேர்க்கையும் இஸ்கான் சார்பில் நடைபெற்றது. குழந்தைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு, விநாடி, வினா போட்டிகள் நடைபெற்றன. இதேபோல் இன்று, 1,008 வகையான நைவேத்தியங்களும் நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT