தமிழகம்

சென்னை - பெங்களூரு இடையேயான அதிவிரைவு சாலை ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. அதில் மத்திய தரைவழிபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று, மின்சாரத்தில் இயங்கும் சரக்கு வாகனத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:

இந்திய வாகன தொழில்துறை உலக அளவில் முதலிடத்துக்கு வரவேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். வாகனத் தொழில் துறை மத்திய, மாநில அரசுகளுக்கு அதிக அளவில் ஜிஎஸ்டி வரி வருவாயை ஈட்டிக் கொடுக்கும் துறையாக உள்ளது.

அசோக் லேலண்ட் நிறுவனம் வாகனத் தொழில் துறையில் ஆராய்ச்சி, மேம்பாட்டில் கவனம் செலுத்தி புதிய மாடல்களை வெளிக்கொணர்ந்து வருவதை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறேன். இந்திய பொருளாதார வளர்ச்சியில் அசோக்லேலண்ட் நிறுவனம் முக்கிய பங்குவகித்துள்ளது. இது நாட்டுக்கு வேலைவாய்ப்பை மட்டும் வழங்கவில்லை, வளத்தையும் வழங்குகிறது.

டீசலில் பேருந்துகளை இயக்கஒரு கி.மீ. தூரத்துக்கு ரூ.115 செலவாகிறது. அதே நேரத்தில் மின்சாரத்தில் இயங்கும் ஏசி அல்லாத பேருந்துகள் ஒரு கி.மீ. தூரத்துக்கு இயக்க ரூ.39, ஏசி பேருந்துகளை இயக்க ரூ.41 செலவாகிறது. மானியம் அல்லாமல் ரூ.60 மட்டுமே செலவாகிறது. மின்சார வாகனங்கள் மூலம் செலவும் குறைகிறது.மாசு ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. இதுபோன்ற பேருந்துகள் நாட்டுக்கு தேவை.

மத்திய அரசு தற்போது சிறந்தசாலைகளை உருவாக்கி வருகிறது. தற்போது 36 பசுமை அதிவிரைவு சாலைகளை உருவாக்கி வருகிறோம். சென்னை மற்றும் டெல்லி இடையே சாலை அமைக்கிறோம்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பாக பெங்களூரு- சென்னை அதிவிரைவுச் சாலை பணிகள் தொடர்பாக ஆய்வு செய்தேன். இத்திட்டம் வரும் ஜனவரியில் மக்கள்பயன்பாட்டுக்கு வரும். இந்த சாலையில் சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல சில மணி நேரமே ஆகும். அதற்கேற்ற வகையில் அசோக் லேலண்ட் நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும், படுக்கைவசதி கொண்ட சொகுசு பேருந்துகளை தயாரிக்க வேண்டும். இதன்மூலம் பயண நேரம், எரிபொருள் செலவு வெகுவாக குறையும் என்பதால் பயணக் கட்டணம் 30 சதவீதம் வரை குறையும். மாசு ஏற்படுவதும் குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அசோக் லேலண்ட் நிறுவன தலைவர் தீரஜ் இந்துஜா, மேலாண் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஷீனு அகர்வால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT