தஞ்சாவூர்: நடப்பாண்டில் தற்போதைய காரீப் பருவத்தில் 5.21 கோடி டன் அரிசி கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று இந்திய உணவுக் கழகத் தலைவர் அசோக்குமார் கே.மீனா தெரிவித்தார்.
தஞ்சாவூர் - புதுக்கோட்டை சாலையில் உள்ள இந்திய உணவுக் கழகக் கோட்ட அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை, இந்திய உணவுக் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அசோக்குமார் கே.மீனா நேற்று திறந்துவைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அரிசி உற்பத்தியில் சுயசார்பு நிலை எட்டப்பட்டுள்ளதால், போதுமான அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, நடப்பாண்டும் அரிசி உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 5.70 கோடி டன் அரிசி கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போதைய நிலையில் கோதுமை உற்பத்தியும் போதுமான அளவுக்கு உள்ளது.
கடந்த ஆண்டு கோதுமையின் தேவை 2.62 கோடி டன்னாக இருந்த நிலையில், போதுமான அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதேபோல, கடந்த ஆண்டுபிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா உள்ளிட்ட திட்டங்களுக்கு 4 கோடி டன் அரிசி தேவைப்பட்ட நிலையில், அதைவிட கூடுதலாக 5.70 கோடி டன் கொள்முதல் செய்யப்பட்டது.
விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் திறந்தவெளி சந்தை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள், பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் 80 கோடி மக்களுக்கு உணவு தானியங்களை வழங்குகின்றன. மீதமுள்ள 60 கோடி மக்களுக்கு திறந்தவெளி சந்தை மூலம் உணவு தானியங்கள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழாண்டில் தற்போதைய காரீப் பருவத்தில் 5.21 கோடி டன் அரிசி கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், இதைவிட கூடுதலாக அரிசி கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் சிறுதானிய ஆண்டு இயக்கத்தையொட்டி, கேழ்வரகு, கம்பு உள்ளிட்ட சிறு தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் சிறு தானியங்களைக் கொள்முதல் செய்ய மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களது நெல்லை நன்கு உலர வைத்து, 17 சதவீத ஈரப்பதத்துக்குள் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்தால், நுகர்வோருக்கும் தரமான அரிசி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், இந்திய உணவுக் கழக தமிழ்நாடு பொது மேலாளர் ப.முத்துமாறன், மாவட்ட மேலாளர் கே.ரோகினேஸ்வர குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.