தமிழகம்

நாங்குநேரி சம்பவத்தில் கருத்து தெரிவித்த ஓய்வுபெற்ற நீதித் துறை நடுவருக்கு ஜாமீன்

செய்திப்பிரிவு

மதுரை: நாங்குநேரி சம்பவம் குறித்து யூடியூப் சேனலில் தவறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட, ஓய்வுபெற்ற நீதித்துறை நடுவருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

தென்காசியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதித் துறை நடுவர் ராம்ராஜ். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாருக்காக நீதிமன்றத்தில் ஆஜரானவர்.

இந்நிலையில், நாங்குநேரியில் பள்ளிச் சிறுவன், சிறுமி ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு இவர் பேட்டி அளித்தார்.

அப்போது, இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்படும் சூழலை உருவாக்கியதாக ராம்ராஜ் மீது தென்காசி சேந்தமரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ராம்ராஜைக் கைது செய்தனர். இந்த வழக்கில், ஜாமீன் கோரி ராம்ராஜ் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்து நீதிபதி இளங்கோவன் பிறப்பித்த உத்தரவில், “மனுதாரர் பொறுப்பான நீதித் துறை நடுவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார். அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராகவும், சட்டம்-ஒழுங்குபாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் பேசியிருக்கக் கூடாது.

இருப்பினும் மனுதாரர் சிறையில் இருந்த காலத்தைக் கருத்தில்கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் இவ்வாறு பேசமாட்டேன் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். தினமும் காலையில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT