கோவை: திராவிட இயக்கங்கள் இந்து மதத்துக்கு எதிரானவை அல்ல என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்தார்.
மதிமுக சார்பில், மதுரையில் வரும் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாள் மாநாடு நடக்கிறது. இதுதொடர்பாக கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சித்தாபுதூரில் உள்ள மதிமுக மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ பங்கேற்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சனாதன கலாச்சாரம் வேறு, இந்து மதம் என்பது வேறு. திராவிடர்களும், திராவிட இயக்கங்களும் இந்து மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து, திராவிட இயக்கங்கள், இந்துக்களுக்கு எதிரி என்பதுபோல வட மாநிலங்களில் சித்தரித்து வருகிறார்கள்.
மக்களவைத் தேர்தல் வருவதால், மத்திய அரசின் குறைகளை மறைக்கவும், திசை திருப்பவும் இதை செய்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியை பார்த்து மத்தியில் ஆளுங்கட்சிக்கு பயம் வந்திருப்பதால், மத ரீதியாக காழ்ப்புணர்ச்சியை உருவாக்கப் பார்க்கிறார்கள். அன்பே சிவம் என்பது தான் இந்து மதம்.
எதிர்க்கட்சி தலைவர் என்பதால் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி திமுக ஆட்சி மீது குறை கூறியுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியப் படாது. மின் கட்டண உயர்வுக்கு மாநில அரசுகள் காரணம் அல்ல. மத்திய அரசு தான் காரணம். பாஜக ஆளும் மாநிலங்களில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.