தமிழகம்

என்எல்சி வேலைநிறுத்த நோட்டீஸ்: முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்காத நிர்வாகம்

செ.ஞானபிரகாஷ்

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக நோட்டீஸ் வழங்கிய நிலையில் புதுச்சேரியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு என்எல்சி நிர்வாகம் வராததைக் கண்டித்து வரும் 28-ம் தேதி என்எல்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நெய்வேலி என்எல்சியில் பணிபுரியக் கூடிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 2012-ம் ஆண்டு என்எல்சி நிர்வாகம் ஒப்பந்தமிட்டது. அதன் அடிப்படையில் பணி நிரந்தரம் மற்றும் ஒப்பந்தங்களின் அடிப்படையில் உயர்த்தப்பட்ட ஊதியம், அடிப்படை ஊதியம் உள்ளிட்டவைகளை நிர்வாகம் வழங்கவில்லை என்று ஒப்பந்த தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.

என்எல்சி நிர்வாகத்தைக் கண்டித்து கடந்த 11-ம் தேதி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த நோட்டீஸை வழங்கினர். இந்நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண புதுச்சேரியில் உள்ள மத்திய தொழிலாளர் நல உதவி ஆணையர் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் மட்டும் கலந்து கொண்டனர். என்எல்சி நிர்வாக தரப்பில் இருந்து யாரும் பங்கேற்காததால் கூட்டம் அடுத்த மாதம் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடேசன் கூறுகையில், "தொழிலாளர்கள் நலன் கருதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் என்எல்சி நிர்வாகத்தினர் கலந்து கொள்ளாதது தொழிலாளர்கள் நலனை புறக்கணிக்கும் போக்கு என்பது உறுதியாகிவிட்டது. எனவே என்.எல்சி நிர்வாகத்தை கண்டித்து வருகிற 8-ம் தேதி என்எல்சி நிறுவனம்முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம். ஏற்கெனவே அறிவித்தபடி வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் இழப்புக்கு என்எல்சி நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT