சென்னை: இந்தியாவின் பெயரை மாற்றுவதாக கூறுவதற்கு பின்னால் ஓர் அரசியல் இருப்பதாக கனிமொழி எம்.பி. விமர்சனம் செய்துள்ளார்.
வானவில் அறக்கட்டளை, சமூகசெயல்பாட்டுக்கான ஆராய்ச்சி நிறுவனம், நாடோடி இனத்தவர் மற்றும் பழங்குடிகள் தன்மேம்பாட்டு மையம் இணைந்து தமிழகத்தின் 8 மாவட்டங்களில் நரிக்குறவர், பூம்பூம் மாட்டுக்காரர் - ஆதியன், லம்படா, காட்டுநாயக்கர் ஆகிய 4 நாடோடி பழங்குடியினர் இடையே விரிவான பங்கேற்பு ஆராய்ச்சி மேற்கொண்டது.
இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல்ஆஃப் சோஷியல் ஒர்க் வளாகத்தில் இதன் ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு அறிக்கையை வெளியிட்டார். அந்த நிகழ்விலும், தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பிலும் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள நாடோடிபழங்குடிகளின் உரிமைகள்,தேவைகளை புரிந்துகொள்வதிலும், மேம்படுத்துவதிலும் இந்த ஆய்வறிக்கை முக்கியமான மைல்கல்லாக இருக்கும்.
நாடோடி பழங்குடியினர் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும், அரசின் திட்டங்கள் அவர்களிடம் எந்த அளவுக்கு சென்று சேர்கிறது என்பது குறித்தும் இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அனைவரையும் அரசின் திட்டத்துக்குள் ஒருங்கிணைப்பதற்கு, இதுபோன்ற ஆய்வுகள், கணக்கெடுப்புகள் முக்கியமானவை. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்.
இங்கு பலரும் ‘இந்தியா’, ‘பாரத்’ என்ற 2 பெயர்களையும் பயன்படுத்தும் சூழல்தான் உள்ளது.ஆனால், எப்போதுமே பாரதப்பிரதமர் என்பதைவிட, இந்தியபிரதமர் என்றுதான் அழைப்பிதழ்கள் கொடுக்கப்படும்.
ஆனால், தேவையின்றி புதிதாக சர்ச்சை ஏற்படுத்தும் வகையில், பாரத குடியரசுத் தலைவர் என்பது, இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றப்போகிறோம் என்று கூறுவது ஆகியவற்றுக்கு பின்னால் ஓர் அரசியல் இருக்கிறது. அதை நாம் எதிர்க்க வேண்டும்.
எத்தனையோ விஷயங்களில் மனதை புண்படுத்திவிட்டதாக கூறும் அவர்கள், இப்படி பெயர் மாற்றுவதன் மூலம் இந்தியர்களின் மனதை புண்படுத்த கூடாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி, திரைப்பட இயக்குநர் டாக்சின் பஜ்ரங்கே, ஆதியன் பழங்குடியினர் கழகத்தின் தலைவர் கே.வீரய்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.