சென்னை: சென்னை ராயபுரத்தில் காவல்துறை வாகனம் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தில், 4 பெண் காவலர்கள் காயமடைந்தனர்.
சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து 14 கைதிகளை ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு மருத்துவ சிகிச்சைக்காக போலீஸார், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்தனர்.
அந்த வேனை காவலர் சரவணக்குமார் என்பவர் ஓட்டினார். ஸ்டான்லி அரசு மருத்துவமனை முன்பு வரும்போது வேன் மீது எதிரே வந்த ஒரு தண்ணீர் லாரி திடீரென மோதியது. இதில் வேனில் இருந்த பெண் காவலர்கள் ரஞ்சனி, சபீதா ஆனந்தி, கார்த்தி ப்ரியா, சாஜிதா ஆகியோர் காயமடைந்தனர்.
உடனே அவர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர். விபத்து தொடர்பாக ராயபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.