சென்னை: தீவிர நோய் எதிர்ப்பாற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 11 மாதக் குழந்தைக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வெற்றிகரமாக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக மருத்துவமனை டீன் தேரணிராஜன் கூறியதாவது: திருச்சியைச் சேர்ந்த 11 மாதக் குழந்தை ஒன்று தீவிர நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு (எஸ்சிஐடி) நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. இத்தகைய பிரச்சினைக்கு உள்ளான குழந்தைகளுக்கு உரிய சிகிச்சைகளை அளிக்காவிடில் பிறந்த ஓராண்டுக்குள் உயிரிழக்கும்.
அதைக் கருத்தில் கொண்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தைக்கு உயர் சிகிச்சையளிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மட்டுமே அக்குழந்தையைக் காப்பாற்ற ஒரே வழியாக இருந்தது. வெறும் 11 மாதங்கள் நிறைவடைந்த அக்குழந்தைக்கு அதற்கு முன்னதாக தீவிர காசநோய் பாதிப்பு ஏற்பட்டு, எழும்பூர் அரசு குழந்தைகள் நலமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பொதுவாகக் குழந்தைகளின் ரத்த நாளத்தை ஒவ்வொரு முறையும் கண்டறிந்து அது வழியே மருந்துகளைச் செலுத்துவது முடியாது. அதனால், அந்த குழந்தைக்கு ரத்த நாளத்தை நேரடியாக இணைக்கும் சாதனம் நெஞ்சகப் பகுதிக்குள் பொருத்தி (போர்ட்-அ-கேத்) சிகிச்சை அளிக்கப்பட்டது. காசநோயிலிருந்து அக்குழந்தை மீண்ட பிறகு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்காக ஸ்டெம் செல்கள் தானமாகப் பெறப்பட்டன.
இதையடுத்து மருத்துவமனையின் குழந்தைகள் குருதிசார் சிகிச்சை துறைத் தலைவர் ரவிச்சந்திரன், உதவிப் பேராசிரியர் அருணா ராஜேந்திரன், குருதிசார் துறைத் தலைவர் ஹரிஹரன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் போர்ட்-அ-கேத்ஸ்டெம் முறையில் ஸ்டெம் செல்களை மாற்றி அக்குழந்தைக்கு 2 மாதங்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்த சிகிச்சையில் ரத்த வங்கி, சிறுநீரகம், தீவிர சிகிச்சை, குழந்தைகள் நுரையீரல், குழந்தைகள் அறுவை சிகிச்சைப் பிரிவுகளின் மருத்துவர்கள் முக்கிய பங்காற்றினர்.
அதன் பின்னர் நலமடைந்து அக்குழந்தை வீடு திரும்பியது. அடுத்த ஓராண்டுக்கு எதிர்ப்பாற்றலை உற்பத்தி செய்யும் இம்யூனோகுளோப்யூலின், சைக்ளோஸ்போரின் சிகிச்சைகள் அக்குழந்தைக்கு வழங்கப்படும். எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை செலவாகும். ஆனால், இந்த மருத்துவமனையில் அக்குழந்தைக்கு முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனையில் ஒரு வயதுக்கும் குறைவான குழந்தை ஒன்றுக்கு இதுபோன்ற சிக்கலான சிகிச்சையளிப்பது இதுவே முதன்முறை ஆகும். பொதுவாக நெருங்கிய ரத்த உறவுகளுக்குள் திருமணம் புரிந்தவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இத்தகைய மரபணுசார் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.