தமிழகம்

கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பெட்ரோல் விலை குறைக்காதது ஏன்? - மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி

செய்திப்பிரிவு

சிட்லபாக்கம்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைக்கப்படாமல் இருப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

விலைவாசி உயர்வு, வேலையின்மைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் நடைபெறுகிறது. தென்சென்னை மாவட்டத்தில் கிண்டி ரயில் நிலையத்தில் மறியல் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தை விளக்கி சிட்லபாக்கத்தில் நேற்று பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், சிஏஜி வெளிக்கொண்டு வந்துள்ள ஆயுஷ்மான் பாரத் திட்ட முறைகேடுகளை விளக்கி பேசினார். பட்டினி குறியீட்டில் இந்தியா பின்னோக்கி செல்வதையும், இந்தியாவின் வளங்கள் அதானி, அம்பானிக்கு மாற்றப்படுவதையும் விமர்சித்து பேசினார்.

மேலும், “இந்தியாவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய்யில் 47 சதவீதம் இந்தியாவிலேயே எடுத்து சுத்திகரிக்கப்படுகிறது. இதற்கான உற்பத்தி செலவுகுறைவு. சர்வதேச சந்தையில் இருந்து 53 சதவீதம் கச்சாஎண்ணெய் இறக்குமதி செய்து, சுத்திகரித்து விற்கப்படுகிறது.

இதற்கான உற்பத்தி செலவு சற்றுஅதிகம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துவிட்டது. ஆனாலும் பெட்ரோலிய பொருட்களின் விலை குறையவில்லை. இதற்கு காரணம், இரண்டு வகையான பெட்ரோலுக்கும் ஒரே விலை தீர்மானிப்பதுதான். இதனை அரசு கைவிட வேண்டும்” என்றார்.

இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா, சிஐடியு மாவட்டத் தலைவர் இ.பொன்முடி உள்ளிட்டோர் பேசினர்.

SCROLL FOR NEXT