பொன்னேரி: மீஞ்சூர் அருகே புதுப்பேடு பகுதியில் தயாராகி வரும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி சிலைகளின் மாதிரிகளை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள புதுப்பேடு பகுதியில் சிற்பி தீனதயாளன் சிற்பக் கூடம் அமைந்துள்ளது. இந்த சிற்ப கூடத்தில்தான், அண்ணா அறிவாலயம் மற்றும்ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலைகள் உள்ளிட்டபல்வேறு சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை- மாநில கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்சிலையை அமைக்கவும், முன்னாள்முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி சிலைகளை, அவர்களின் நினைவிடங்களில் அமைக்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்காக, முன்னாள் பிரதமர் வி.பி.சிங், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகள் சிற்பி தீனதயாளன் சிற்பக்கூடத்தில் தயாராகி வருகின்றன. முதற்கட்டமாக இந்த சிலைகளின் மாதிரிகள் களிமண்ணால் செய்யப்பட்டுள்ளன. அந்த மாதிரிகளை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், சிற்பக் கூடத்துக்கு வருகை தந்து, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, சிலைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்துசிற்பிக்கு முதல்வர் எடுத்துரைத்தார். முதல்வரின் ஆய்வின்போது, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராசன் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும், முதல்வர் சொன்ன திருத்தங்களின்படி, அடுத்த கட்டமாக பிளாஸ்டர் ஆப் பாரீஸில் உருவாக்கப்படும் சிலைகள், இறுதியாக வெண்கலத்தில் சிலைகள் தயாராக உள்ளன. அவ்வாறு வெண்கலத்தில் தயாராகும் வி.பி.சிங் முழு உருவ சிலை 9 அடி உயரத்திலும், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகள் 3.5 அடி உயரத்திலும் தயாராக உள்ளன என சிற்பக் கூடத்தினர் தெரிவித்தனர்.