திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பூண்டி அடுத்துள்ள மோவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினி. கூலித் தொழிலாளியான இவர், சுமார் 25 ஆடுகளை வைத்து பராமரித்து வருகிறார். பகலில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு, மாலையில் இரு கொட்டகைகளில் கட்டி வைப்பது வழக்கம். அந்த வகையில், ரஜினி நேற்று முன்தினம் பகலில் 25 ஆடுகளையும் மேய்ச்சலுக்கு விட்டு, மாலையில் இரு கொட்டகைகளில் ஆடுகளை கட்டிவிட்டு உறங்கச் சென்றார்.
தொடர்ந்து, நேற்று அதிகாலை ரஜினி கொட்டகைகளுக்கு வந்துபார்த்தபோது, 8 ஆடுகள் கழுத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன. இத னால், அதிர்ச்சியடைந்த ரஜினி,கால்நடை மருத்துவருக்கு தகவல்தெரிவித்தார். இதன் அடிப்படையில், கால்நடை பராமரிப்புத் துறைஅதிகாரிகள் உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
அதேநேரத்தில் கிராம மக்கள், தங்கள் கிராம பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதால், சிறுத்தைப்புலிகள் தான் ஆடுகளை கொன்று இருக்கும் என கூறுகின்றனர். ஆனால், வனத்துறையினர் தரப்பில் பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் சிறுத்தைப்புலி நடமாட்டம் கிடையாது. ஆகவே, ஆடுகள் உயிரிழப்புக்கு சிறுத்தைப் புலி காரணமாக இருக்க வாய்ப்பில்லை. மாறாக, காட்டுப்பூனைகள் கடித்து, ஆடுகள் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், ஆடுகள் உயிரிழப்புக்கு காரணம் சிறுத்தைப்புலியா, காட்டுப்பூனையா என்பது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.