விருத்தாசலம்: கடலூர் மாவட்டத்தில் 902 முழு நேரக் கடைகள், 514 பகுதி நேரக் கடைகள் என மொத்தம் 1,416 நியாய விலைக் கடைகள் உள்ளன. 6 லட்சத்து 94 ஆயிரத்து 054 குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்தக் கடைகளின் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
இந்தப் பணிகளை மேற்கொள்வதில் பணியாளர் பற்றாக்குறை உள்ளது. இதை சரி செய்யும் வகையில், கடலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 225 விற்பனையாளர் பணியிடங்கள், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் காலியாக உள்ள 4 பணியிடங்கள், கூட்டுறவு பண்டக சாலையில் உள்ள 2 பணியிடங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் காலியாக உள்ள 14 பணியிடங்கள் என மொத்தம் 245 பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்புவது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கடந்த 2022 அக்டோபர் 13-ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 17 ஆயிரம் பேர் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான நேர்முகத்தேர்வு கடந்தாண்டு டிசம்பர் 14-ம் தேதி தொடங்கி, 26-ம் தேதி வரை கடலூர் தேவனாம்பட்டிணம் பெரியார் அரசுக் கலைக் கல்லூரியில் நடத்தப்பட்டது. 1,500 பேரிடம் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டது.
நேர்காணல் நடந்து முடிந்து, ஓராண்டை நெருங்கும் நிலையில் இதுவரை அவர்களுக்கான தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை. ஆனால். நாகை, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இதே போல் வேலைக்கு தேர்வானவர்கள் பட்டியல் கடந்த ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டு விட்டது.
“எங்களில் பலர், ஆளும் கட்சிப் பிரமுகர்களின் பரிந்துரைக்காக சன்மானம் அளித்து ஓராண்டை நெருங்கி விட்ட நிலையில், இதுவரை பணி ஆணை கிடைக்காத விரக்தியில் இருக்கிறோம். ஓரிரு மாதத்தில் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் அக்கம் பக்கத்தில் கடனை வாங்கி, நகையை அடமானம் வைத்து, ரூ.7 லட்சம் வரை கொடுத்துள்ளோம். இவ்வாறு பணம் கொடுத்து ஓராண்டை நெருங்கும் நிலையில், வாங்கிய கடனுக்கான வட்டி கழுத்தை நெருக்குகிறது. எங்கே போய் கேட்பது எனத் தெரியாமல் குழப்பத்தில் தவிக்கிறோம்” என்று கூறுகின்றனர் இதற்காக பணம் கொடுத்தவர்கள்.
கட்சி வட்டாரங்களில் இதுபற்றி விசாரித்த போது, “ஆளும்கட்சிப் பிரமுகர்களைக் காட்டிலும், கூட்டணிக் கட்சியினர் அளித்த பரிந்துரைகள் அதிகமாக உள்ளன. அதை தட்டிக் கழிக்கவும் முடியவில்லை; அந்தப் பட்டியலை அவ்வாறு போடவும் வழியில்லை. அதனாலேயே இந்த தாமதம். என்ன செய்வதென்று தெரியாமல் காலம் தாழ்த்திக் கொண்டே வருகின்றனர்” என்று இதுபற்றி விஷயமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
“கடந்த முறை கிராம உதவியாளர்கள் நியமனத்தில் நடந்தது போன்று இந்த விஷயத்திலும் ஆளும் கட்சிப் பிரமுகர்கள் நடந்து கொண்டால், அதற்கான பதிலடியை மக்களவைத் தேர்தல் மூலம் உணர்த்துவோம்” என்று கூட்டணிக் கட்சியினர் தெரிவிக்கின்றனர். மத்தளத்திற்கு இருபுறமும் இடி என்பதைப் போல் இந்த விஷயத்தில் ஆளும் கட்சித் தரப்பு தவித்து வருகிறது. அதனாலேயே இந்த பணி நியமனத்தில் தாமதம் நிலவுகிறது என்ற குற்றச்சாட்டை வைக்கின்றனர்.
மற்ற மாவட்டங்களில் தேர்வான விற்பனையாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், கடலூர் மாவட்டத்தில் வெளியிடப்படாதது குறித்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளரை தொடர்பு கொண்டு அறிய முயன்றோம். அவர், ‘தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்’ என்ற தகவலே தொடர்ந்து கிடைத்து வருகிறது.