தமிழகம்

சிறையில் சொகுசு வசதி வழக்கு | சசிகலாவுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரன்ட் - பெங்களூரு லோக் ஆயுக்தா நீதிமன்றம் உத்தரவு

இரா.வினோத்

பெங்களூரு: பெங்களூரு சிறையில் விதிமுறைகளை மீறி சொகுசு வசதிகளை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வ‌ழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் சசிகலாவும், இளவரசியும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை த‌ண்டனை அனுபவித்தனர்.

அப்போது இருவரும் சிறைத் துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து, விதிமுறையை மீறி சிறையில் சொகுசு வசதிகளை பெற்றதாக சிறைத் துறை அதிகாரியான ரூபா புகார் தெரிவித்தார். சசிகலாவும், இளவரசியும் சிறையில் இருந்து ஷாப்பிங் செல்வது போன்ற‌ காட்சிகளும் வெளியாகின.

பெங்களூரு லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், துணை கண்காணிப்பாளர் அனிதா, காவல் ஆய்வாளர் கஜராஜா மகனூர், சசிகலா, இளவரசி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதையடுத்து, சசிகலா, இளவரசி உள்ளிட்ட 5 பேருக்கும் ஜாமீனில் வரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. சசிகலா, இளவரசி உள்ளிட்டோருக்கு ஜாமீன் கோரி கையெழுத்திட்டவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அக்.5‍-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT