திருப்பூர்: பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 3 நாட்களுக்கு பிறகு உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் நேற்று உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ளக்கிணறை சேர்ந்த மோகன்ராஜ் (49), அவரது சகோதரர் செந்தில்குமார் (46), தாயார் புஷ்பவதி (68), சித்தி ரத்தினாம்பாள் (59) ஆகியோரை, கடந்த 4-ம் தேதி இரவு குடிபோதையில் இருந்த கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதுதொடர்பாக பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்து, மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி மேற்பார்வையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து(24) என்பவரை, குண்டடம் அருகே போலீஸார் கைது செய்தனர். கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதத்தை தொட்டம்பட்டி குடிநீர் தொட்டி மேல் மறைத்து வைத்திருப்பதாகவும், அதை எடுத்து தருவதாகவும் கூறி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிமீது செல்லமுத்து ஏறிச் செல்லும்போது, பின்னால் சென்ற போலீஸாரை தள்ளிவிட்டு, தொட்டியின் மேல் பகுதியில் இருந்து குதித்து தப்பிச் செல்ல முயற்சித்தார். அப்போது, செல்லமுத்துவின் கால் முறிந்தது.
இதையடுத்து, அங்கிருந்த போலீஸார் செல்லமுத்துவை பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை உடல்களை பெறமாட்டோம் என போராட்டம் தொடர்ந்ததால், மோகன்ராஜின் அண்ணன் சிவக்குமார், குடும்பத்தினர் மற்றும் அங்கு திரண்டிருந்த கட்சியினரிடம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சாமிநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் உறுதி அளித்தார். இதையடுத்து, 4 பேரின் உடல்களை பெற்றுக்கொள்வதாக நேற்று மதியம் ஒப்புக்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறும்போது, “எங்களுக்கு எத்தனை நாள் போலீஸ் பாதுகாப்பு தர முடியும்? அனைவரையும் கைது செய்து, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்" என்றனர்.
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.சாமிநாதன் கூறும்போது, “வழக்கில் செல்லமுத்து என்பவர் சிக்கியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் வடக்குஅரியநாயகிபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (எ) செல்வம் (27), தேனி மாவட்டம் முத்தாலபுரம் வைகல்பட்டியை சேர்ந்த விஷால் (20) உள்ளிட்டோர்தான் சம்பவ இடத்தில் வந்து தகராறு செய்து கொலை செய்துள்ளனர்.
சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்பது விசாரணையின் முடிவில்தான் தெரியவரும். எஞ்சியவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. விரைவில் அவர்களை கைது செய்வோம்” என்றார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில், நேற்று மாலை 3.30 மணிக்கு உடல்கள் முறைப்படி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 4 உடல்களும், தனித்தனி ஆம்புலன்ஸுகளில் பல்லடம் கள்ளக்கிணறு வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அதே பகுதியில் அடக்கம் செய்யப்பட்டன. இதையடுத்து, கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.