கோவை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 24-ம் தேதி கோவை வர உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழிற்கடன் முகாம் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை வகித்து ரூ.37.53 கோடி மதிப்பிலான கடனுதவியை தொழில் முனைவோருக்கு வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொழில் துறையினருக்கு உதவும் வகையில் அண்ணல் அம்பேத்கர் திட்டத்தின் கீழ் மொத்தமாக 68 பேருக்கு பல்வேறு வங்கிகள் மூலம் ரூ.37.53 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள இலக்கை மீறி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
கடந்த 1998-ல் கலைஞர் ஆட்சி காலத்தில் வ.உ.சி புத்தகங்கள் அரசுடைமையாக்கப்பட்டன. சில கப்பல் தளங்களுக்கு வ.உ.சி பெயர் சூட்டப் பட்டது. ஸ்டாலின் வ.உ.சி. மைதானத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் சிலை அமைத்துள்ளார்.
மருதமலை கோயிலுக்கு செல்ல போக்குவரத்து வசதி அதிகரித்தல், கூடுதல் வாகனங்களை நிறுத்தும் வகையில் இட வசதி ஏற்படுத்துதல், நடந்து செல்பவர்களுக்கு உதவ பாதையில் உள்ள இடையூறுகளை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேற்கு புறவழிச் சாலை திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட தொழில்முனைவோர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள உண்ணாவிரதம் குறித்து தொழில் துறை அமைச்சர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அமைச்சர் உதயநிதி குறித்து உத்தர பிரதேசத்தை சேர்ந்த சன்னியாசி தெரிவித்துள்ளது சரியல்ல. முதல்வர் ஸ்டாலின் வரும் 24-ம் தேதி கோவை வருகிறார்.
தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே படியூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். கோவையில் ஆய்வு மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.