சென்னை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இஸ்கான் கோயிலில் இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கோயில் தலைவர் சுமித்ரா கிருஷ்ண தாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, கிழக்கு கடற்கரை சாலைஅக்கரையில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணாகோயிலில் சிறப்பு வழிபாடு, கொண்டாட்டங்கள் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இன்று (செப்.6) காலை 8.30 முதல் பிற்பகல் 2 மணி, மாலை 3 மணி முதல் இரவு 9.30 மணி வரை ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ண தரிசனம் மற்றும் ஆரத்தி நடைபெறும்.
இதேபோல நாளையும் (செப்.7) ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் தரிசனம் காலை 8.30 மணிக்கு தொடங்கும். அன்று முழுவதும் பஜனைகளும் கீர்த்தனைகள், அனுகல்ப பிரசாதம் வழங்குதல் போன்றவை நடைபெறும். நிகழ்வில், எச் எச் பானு சுவாமி ஆசி வழங்குகிறார். தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ண சந்திராவளி திருவுருவங்களுக்கு அபிஷேகம் நடக்கும்.
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணர் அவதரித்ததை குறிக்கும் வகையில் நள்ளிரவு 12 மணிக்குஆரத்தி காட்டப்படும். செப்.8-ம்தேதியும் பஜனைகள், கீர்த்தனைகள் நடப்பதோடு, நண்பகல் 12 மணி அளவில் எச் எச் பானு சுவாமியின் சொற்பொழிவு நடைபெறும். கண்காட்சிகள், ஸ்டால்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.