சென்னை: சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் நகரில் துணை அஞ்சல் நிலையம் செயல்பட்டு வருகிறது. காமராஜர் நகர், ஸ்ரீதேவி நகர், குமரன் நகர், ராம்நகர், லாசர் நகர், ஐயப்பன் நகர், கோவர்த்தனகிரி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த அஞ்சலகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இங்கு ஒரு போஸ்ட் மாஸ்டர், 2 அஞ்சல் உதவியாளர்கள் மற்றும் 9 தபால்காரர்கள் உள்ளனர். இந்த அஞ்சலகத்தில் பொதுமக்களுக்கு வழக்கமான மணியார்டர், சேமிப்பு கணக்கு , ஆர்.டி., பதிவஞ்சல், விரைவு அஞ்சல், பார்சல் உள்ளிட்ட வழக்கமான அஞ்சல் சேவைகளும், இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி, ஆதார் உள்ளிட்ட சிறப்பு சேவைகளும் வழங்கப்படுகின்றன. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த அஞ்சலகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அதேபோல், நாள்தோறும் 3,600-க்கும் மேற்பட்ட சாதாரண தபால்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு தபால்கள் மற்றும் பார்சல்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், இங்குள்ள ஆதார் சேவை கவுன்ட்டரில் போதிய ஊழியர்கள் இல்லாததால் ஆதார் தொடர்பான பணிகள் பாதிக்கப் பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: ஆவடி காமராஜர் நகர் அஞ்சலகம் தினசரி காலையில் 8.30 மணிக்கு திறக்கப்படுகிறது. திறந்த உடன் சேமிப்புக் கணக்கு, ஆர்.டி. கணக்கில் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல் மற்றும் ஸ்டாம்ப் விற்பனை, பார்சல் அனுப்புவது உள்ளிட்ட சேவைகள்மேற் கொள்ளப்படுகின்றன.
அதே சமயம், ஆதார் சேவை கவுன்ட்டர் 10 மணிக்கு மேல்தான் செயல்படுகிறது. இந்தக் கவுன்ட்டருக்கு தனியாக ஊழியர் இல்லாததால், போஸ்ட் மாஸ்டர்தான் இந்தக் கவுன்ட்டரையும் சேர்த்து பார்க்க வேண்டியுள்ளது. அவர் காலையில் தனது வழக்கமான பணிகளை முடித்து விட்டு 11 மணிக்கு மேல்தான் ஆதார்கவுன்ட்டர் பணிகளை மேற்கொள்கிறார்.
இதனால், காலை நேரத்தில் அலுவலகம் செல்பவர்கள், தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் புதிதாக ஆதார் அட்டையை பெறவோ அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளவோ முடிவதில்லை. வங்கிக் கிளைகளிலும் இதுபோன்ற ஆதார் சேவை கவுன்ட்டர்கள் உள்ளன.
அங்கு அதற்கென தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வழக்கமான நேரத்தில் கவுன்ட்டரும் செயல்படுகிறது. அதேபோல், அஞ்சலகத்திலும் ஆதார் சேவை பணிக்காக பிரத்யேகமாக ஒரு ஊழியரை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜனிடம் கேட்டபோது, ஆதார் சேவைக்கு பணிக்கு அயல்பணி (அவுட்சோர்சிங்) மூலம் ஆட்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களுக்குள் இதற்கான டெண்டர் விடப்பட்டு ஆட்கள் தேர்வு செய்து நியமிக்கப்படுவார்கள் என்றார்.