தமிழகம்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கட்சியிலிருந்து நீக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆற்காடு சுரேஷ்.இவர் மீது கொலை உள்ளிட்ட 38 வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 18-ம் தேதி கும்பல் ஒன்று பட்டினப்பாக்கத்தில் சுரேஷை கொலை செய்தது.

இந்த வழக்கில் ஏற்கெனவே 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலையில் அதிமுக நிர்வாகிகள் சி.ஜான் கென்னடி, பி.சுதாகர் பிரசாத் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும், ஜான் கென்னடி திருநெல்வேலியிலிருந்து கூலிப்படையை வரவழைத்ததும் போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கட்சியின் கொள்கை, குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்குக் களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாலும், தென் சென்னை வட கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரம் விளக்குவடக்கு பகுதி மாவட்ட பிரதிநிதி ஜான் கென்னடி, 111-வது வட்டம் செயலாளர் சுதாகர் பிரசாத் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT