சென்னை: ஏடிஎம் இயந்திரத்தின் மீது கேட்பாரற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்த ரூ.25 ஆயிரத்தை காவலர் ஒருவர் மீட்டு, காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு காவலராக பணிபுரிபவர் தமிழ்மணி. இவர், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது செனாய் நகரில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்துக்குள் வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில் வழக்கம்போல் கையெழுத்திட சென்றபோது அங்குள்ள ஏடிஎம் இயந்திரத்தின் மேல் பகுதியில் ரூ.25 ஆயிரம் பணம் இருந்துள்ளது. ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை எடுத்த வாடிக்கையாளர்கள் யாரோ அதை மறதியாக அங்கேயே வைத்துச் சென்றுள்ளனர்.
பணத்தை பார்த்த தமிழ்மணி, அதை எடுத்து அமைந்தகரை காவல் நிலைய ஆய்வாளரிடம் ஒப்படைத்தார். அந்த பணம் யாருக்கு சொந்தமானது என அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். கேட்பாரற்று கிடந்த ரூ.25 ஆயிரத்தை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலர் தமிழ்மணியை போலீஸ் அதிகாரிகள் நேரில் அழைத்து பாராட்டினர்.