ராமேசுவரம்: புயல் காற்று வீச வாய்ப்பு உள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத் துறை அறிவித்துள்ளது.
வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் காற்று சுழற்சி நிலவி வருகிறது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மன்னார் வளைகுடா, பாக் நீரிணை, குமரி கடல் பகுதியில் 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசக்கூடும். மீனவர்களின் பாதுகாப்பை கருதி, மறு அறிவிப்பு வரும் வரை யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத் துறை அறிவித்துள்ளது.
நேற்று விசைப்படகு மீனவர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்பட வில்லை. ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, வாலி நோக்கம், தேவிபட்டினம், தொண்டி, எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், ஆழம் குறைந்த பகுதியில் தங்கள் விசைப் படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.