தமிழகம்

4 பேர் கொலை சம்பவம் | பல்லடத்தில் போலீஸார் குவிப்பு; கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு

இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: பல்லடம் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரேதப் பரிசோதனை இன்று நடைபெற உள்ள நிலையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பல்லடம் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். மேற்கு மண்டல ஐஜி பவானிஸ்வரி மருத்துவமனையில் உள்ளார்.

நடந்தது என்ன? திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (47). இவர் தவிடு புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டின் அருகே 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

இதனை செந்தில்குமார் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் செந்தில்குமாரை முதலில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இதனை தட்டிக்கேட்க வந்த அவரது தம்பி மோகன்ராஜ் மற்றும் மோகன்ராஜின் தாய் புஷ்பவதி, செந்தில்குமாரின் சித்தி ரத்தினாம்பாள் ஆகியோர் அந்தக் கும்பலை கண்டித்துள்ளனர். அப்போது அந்த கும்பல் இவர்களையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையான வெட்டியும், தாக்கவும் செய்துள்ளனர்.

இதில் அவர்களது கை, கால்கள் என தனித்தனியாக வெட்டி வீசப்பட்டன. இதுபோல் முகத்திலும் அரிவாளால் வெட்டு விழுந்துள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் 4 பேரையும் வெட்டிச்சாய்ந்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதற்கிடையே அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குவிந்தனர். இது குறித்து பல்லடம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும், கொலையாளிகளை கைது செய்யக்கோரி, பொதுமக்கள் அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து விரைவாக கைது செய்வதாகக்கூறி போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பவானி ஈஸ்வரி, பல்லடம் டி.எஸ்.பி. சவுமியா மற்றும் போலீசார் வந்தனர். சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய அதிகாரிகள் இரவு பல்லடம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் திருப்பூர் அருகில் உள்ள கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் தென்மாவட்டங்களுக்கும் சிலர் சென்றுள்ளனர்.

மேலும், பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் என மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 500-க்கும் மேற்பட்ட போலீசார் மருத்துவமனை மற்றும் பல்லடம் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டத்தில் மோகன்ராஜ் என்பவர் பொங்கலூர் மேற்கு ஒன்றியம் மாதப்பூர் பஞ்சாயத்து பா.ஜனதா கிளைத்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் விசாரணை தொடங்கி உள்ளனர். முன்விரோதத்தின் காரணமாகவும் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்தது.

இதில் முன் விரோதத்தில் தான் செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. செந்தில்குமாரிடம் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் (34) என்பவர் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பணம் பிரச்சினை தொடர்பாக செந்தில்குமார், வெங்கடேசை வேலையை விட்டு நீக்கியுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று வெங்கடேஷ் மற்றும் சிலர் செந்தில்குமார் இடத்தில் மது அருந்தி பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளனர். மேலும் அவர்கள் 4 பேரையும் கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்த தகவல்கள் போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. முக்கிய குற்றவாளியான குட்டி என்கிற வெங்கடேஷ் என்பவரை தனிப்படை போலீஸார் தற்போது பிடித்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

திருப்பூரில் இருந்து செல்லும் டாக்டர்கள் குழு: பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர்கள் 4 பேரின் உடல்களும் பல்லடம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று (திங்கட்கிழமை) 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட இருக்கின்றன. இதற்காக திருப்பூர் அரசு மருத்தவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து 7 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் செல்கின்றனர்.

இந்தக் குழு காலையிலேயே திருப்பூரில் இருந்து புறப்பட்டு சென்றது. விரைவாக பிரேதப் பரிசோதனை அறிக்கை வழங்க வேண்டும் என்பதால், அனுபவமிக்க இந்தக் குழு செல்வது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT