கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகளை அமைக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் கொள்ளிடம் ஆற்றில் 11 மணல் குவாரிகள் உட்பட மொத்தம் 25 மணல் குவாரிகள் ஏற்கெனவே செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 10 மணல் குவாரிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சிஅளிக்கிறது. இந்த மணல் குவாரிகள் திறக்கப்பட்டால், கொள்ளிடம் ஆற்றில் மட்டும் 20 மணல் குவாரிகள் செயல்படும். 87 கி.மீ. தொலைவுக்குள் 20 மணல் குவாரிகள் திறக்கப்பட்டால், அதைவிடக் கொடூரமாக கொள்ளிடம் ஆற்றைச் சீரழிக்க முடியாது.
கட்டுமானப் பணிகளுக்கு அதிக மணல் தேவைப்படுகிறது என்பது புதிய மணல் குவாரிகளை திறப்பதற்கான காரணமாக இருக்க முடியாது. அண்டை மாநிலமான கேரளத்தில் மணல் அள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மணல் அள்ளக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அந்த மாநிலங்களில் கட்டுமானப் பணிகள் தடைபடாமல் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
அதுமட்டுமின்றி, ஆற்று மணலுக்கு ஏராளமான மாற்றுகளும் வந்துவிட்டன. தமிழகஅரசு நினைத்தால் வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதியை அதிகரிப்பது, செயற்கை மணல் உற்பத்தி ஆகியவற்றின் மூலம் தமிழகத்தின் மணல் தேவையைப் பூர்த்தி செய்யலாம். அவற்றை செய்யாமல் மணல் குவாரிகளை ஒன்றன்பின் ஒன்றாகத் திறப்பது இயற்கை மீது நடத்தும் கொடூரத் தாக்குதலாகும்.
கொள்ளிடம் ஆற்றில் 10 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்டி தண்ணீரைச் சேமிக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு 10கி.மீ.க்கு 2 மணல் குவாரிகளை அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தைச்சீரழித்து வருகிறது. காலநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா மறுத்து வருகிறது. இத்தகைய சூழலில் தடுப்பணைகள் கட்டி தண்ணீரைச் சேமிப்பதுதான் அரசு செய்ய வேண்டிய செயலாகும். அதை விடுத்து குவாரிகளை அமைப்பதை அனுமதிக்க முடியாது. கொள்ளிடம் ஆற்றில் 10 புதியமணல் குவாரிகளை அமைக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.