மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,430 கனஅடியாக அதிகரித்தது. ஒகேனக்கல் காவிரியாற்றிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய நீரை திறந்துவிடாததாலும் அணைக்கு நீர் வரத்து சரிந்தது. தற்போது, கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணைக்கு கடந்த 1-ம் தேதி விநாடிக்கு 562 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று முன்தினம் 5,018 கன அடியாகவும், நேற்று காலை 6,430 கனஅடியாகவும் அதிகரித்தது.
காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 48.24 அடியாகவும், நீர் இருப்பு 16.72 டிஎம்சியாகவும் இருந்தது.
விடுமுறை தினத்தையொட்டி, மேட்டூர் அணைப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. நேற்று ஒரே நாளில் அணைப் பூங்காவுக்கு 6,214 பேர் வந்து சென்றனர்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்நிலையில் நேற்று காலை அளவீட்டின்போது காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
தமிழகப் பகுதிகளிலும் மழை: கர்நாடகாவிலிருந்து காவிரியில் திறக்கப்பட்ட நீர் மற்றும் காவிரியாற்றின் தமிழக நீர்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம் பாளையம், பிலிகுண்டுலு, ஒகேனக்கல் உள்ளிட்ட வனப் பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பரிசல் இயக்க தடை: காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. விடுமுறை தினமான நேற்று தருமபுரி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். அதே நேரம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய நீரில் குளித்து மகிழ்ந்தனர்.