உடுமலை: புனரமைக்கப்பட்ட காண்டூர் கால்வாயில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். இது தொடர்பாக ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்திலுள்ள தொகுப்பணைகள் மூலமாக காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இம்மாத இறுதியில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 49 கி.மீ. தொலைவுள்ள காண்டூர் கால்வாய் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால், சுமார் 30 சதவீத நீர் இழப்புஏற்பட்டு வந்தது. விநாடிக்கு 1100கன அடி நீருக்கு பதிலாக 900 கனஅடி வரை மட்டுமே நீர் திறக்கப்பட்டது. கால்வாய் புனரமைக்கப்பட்டால், அதன் நிர்ணயிக்கப்பட்ட அளவை திறக்கலாம் என பொறியாளர்கள் தெரிவித்தனர்.
அதனடிப்படையில், 2011-ம் ஆண்டு ரூ.240 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. அதில் 5 கி.மீ. தொலைவுக்கு மட்டும் பணிகள் நடைபெறவில்லை. இப்பணிகளை மேற்கொள்ள அரசு மீண்டும் ரூ.72 கோடி நிதி ஒதுக்கியது. அதன் மூலமாக கடந்த ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதியும் எஞ்சிய பணிகள் நடைபெற்றன.
இப்பணிகள் நிறைவடைந்து, செப்டம்பர் 1-ம் தேதி காண்டூர் கால்வாயில் விநாடிக்கு 296 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. செப்டம்பர் 2-ம் தேதி திருமூர்த்தி அணையை தண்ணீர் வந்தடைந்தது. இந்நிலையில், புனரமைக்கப்பட்ட கால்வாயின் கரைகளில் சில இடங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, ‘‘பல கோடி நிதிஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட காண்டூர் கால்வாயில், குறைந்தே அளவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கால்வாயின் சில இடங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. முழு கொள்ளளவு தண்ணீர் திறக்கப்பட்டால், அதன் அழுத்தத்தில் மேலும் பல இடங்களில் நீர்க்கசிவுஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, பொதுப் பணித்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். பொதுப் பணித் துறையினர் கூறும்போது, ‘‘விவசாயிகள் கூறிய இடங்களில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.