தமிழகம்

பரனூர் சுங்கச்சாவடி விவகாரத்தில் உண்மை கண்டறிய குழு அமைக்க கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: பரனூர் சுங்கச்சாவடி விவகாரத்தில் உண்மையைக் கண்டறிய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என முதல்வருக்கு மணல் லாரி உரிமையாளர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தென்மாநிலங்களில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ரூ.132 கோடி கூடுதலாக பொதுமக்களின் பணம் சுரண்டப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை கொடுத்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் மட்டும் ரூ.28 கோடி கூடுதலாக வசூலிக்கப்பட்டதாகவும், 4 வழிச்சாலைக்கு பதிலாக 6 வழிச்சாலைக்கான கட்டணத்தை வசூல் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே திமுக ஆட்சி அமைந்ததும் பரனூர், சூரப்பட்டு, நெமிலி, வானகரம், ஆத்தூர் போன்ற காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.

தற்போது வெளியான சிஏஜி அறிக்கை குறித்து மத்திய அரசு உணர வேண்டுமானால் பரனூர் சுங்கச்சாவடி அகற்றப்பட வேண்டும். இது மட்டுமின்றி பரனூர் சுங்கச்சாவடி விவகாரத்தில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, உண்மை நிலையை அறிய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT