தமிழகம்

தக்காளி விலை திடீர் உயர்வு ஏன்?: கோவை வேளாண் பல்கலை. விளக்கம்

ச.கார்த்திகேயன்

தக்காளி விலை அக்டோபர் மாதத்தில் குறைய வாய்ப்பிருப்பதாக, கோவை வேளாண் பல்கலைக்கழக உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம் (டெமிக்) தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பொருளாதார வித்தியாசம் இன்றி, அனைத்து நிலை குடும்பத்தினரின் இன்றியமையாத தேவையாக தக்காளி உள்ளது. இதன் விலை ஜூலை மாத தொடக்கத்தில் ஒரு கிலோ ரூ.14 ஆக இருந்தது, தற்போது ரூ.60 வரை விற்கப்படுகிறது.

வியாழக்கிழமை நிலவரப்படி கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை விற்பனையில் தாக்காளி ஒரு கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது. ஜாம்பஜார், சைதாப்பேட்டை மார்க்கெட், தி.நகர் மார்க்கெட் ஆகியவற்றிலும் ரூ.60க்கு விற்கப்படுகிறது. பண்ணைப் பசுமை நுகர்வோர் கடையில், கிலோ ரூ.50-க்கு விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தக்காளி பயன்பாட்டை குறைத்து வருகின்றனர். நடுத்தர மற்றும் மலிவு உணவகங்களில் தக்காளி சட்னி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து ‘டெமிக்’ பேராசிரியர் ஒருவர் அவர் கூறியதாவது: தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஆடிப்பட்டம், கார்த்திகை பட்டம், தை பட்டம், சித்திரை பட்டம் ஆகிய பருவங்களில் தக்காளி பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்துக்கான தக்காளி தேவையில் 60 சதவீதத்தை ஆந்திர மாநிலம் பூர்த்தி செய்கிறது. கர்நாடகம் 25 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. தமிழக தேவையில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தக்காளி 6 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்கிறது.

தற்போது விதைப்பு காலம் என்பதால் உற்பத்தி குறைந்துள்ளது. கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் கிடைக்கும் தக்காளியும் தற்போது மேற்குவங்கம் மற்றும் ஒடிஷா மாநில வர்த்தகர்களால் வாங்கப்படுகிறது. இதனால் தமிழகத்துக்கு தக்காளி வரத்து 50 சதவீதம் வரை குறைந் துள்ளது. இதனால் விலைவாசி உயர்ந்துள்ளது.

தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடையாத நிலையில் விவசாயிகள் தக்காளி விதைப்பை தாமதமாக செய்து வருகின்றனர். அதனால் தக்காளி உற்பத்தி வழக்கமான நிலையை அடைய மேலும் 2 மாதங்கள் ஆகும். எனவே அக்டோபர் மாதத்தில்தான் தக்காளி விலை குறைய வாய்ப் புள்ளது.

இவ்வாறு பேராசிரியர் கூறினார்.

SCROLL FOR NEXT