சென்னை: காதல் திருமணம் செய்து அமெரிக்காவில் வசித்த இந்திய தம்பதிக்கு 12 வயதில் பெண் குழந்தையும், 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்த மனைவி, குழந்தைகளுடன் சென்னை திரும்பினார்.
இதையடுத்து, மனைவியிடம் உள்ள குழந்தைகளை தன்னுடன் அமெரிக்காவுக்கு கூட்டிச் செல்ல அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்தப் பெண்ணின் கணவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது கணவர் தரப்பில், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு அவர்களை அமெரிக்கா அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், 2 வயது மகனை அனுப்பாவிட்டாலும் மகளையாவது தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்றும்வாதிடப்பட்டது.
அதற்கு மனைவி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. சென்னையிலேயே இருவருக்கும் தரமான கல்வி அளித்து வருவ தாகவும், கணவர் அவ்வப்போது வந்து குழந்தைகளை சந்தித்துச் செல்ல எந்த ஆட்சேபமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. பின்னர், இரு குழந்தைகளையும் அழைத்து அவர்களின் விருப்பத்தை நீதிபதி கேட்டறிந்தார்.
அதன்பிறகு நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு: 12 வயது சிறுமி விவரம் அறிந்தவராக உள்ளார். 2 வயது மகன் எப்போதும் தனது அக்காவின் அரவணைப்பில் இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தங்களின் எதிர்காலத்தில் தாய், தந்தையர் இருவரும் அக்கறை கொண்டிருப்பதாகவும், தந்தை மீது அதீத பாசம் வைத்திருப்பதாகவும்,
தற்போது சென்னையில் படித்துவிட்டு உயர்கல்விக்காக வேண்டுமென்றால் அமெரிக்கா செல்ல விரும்புவதாகவும் அந்த சிறுமி தெரிவித்துள்ளார். எனவே, தனது குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான நிதிஉள்ளிட்ட பங்களிப்பை அப்பாவாகவழங்க வேண்டியது மனுதாரரின் கடமை.
இந்த விஷயத்தில் தாயாருடன் சென்னையில் சந்தோஷமாக வசித்துவரும் குழந்தைகளை தந்தையுடன் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டால் அவர்களின் வாழ்வியல் சம நிலை பாதிக்கும். எனவே, தந்தையின் மனுவை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி உத்தர விட்டுள்ளார்.