அரூர்: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பூதநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் இசையமுதன் (18). மாற்றுத் திறனாளி. ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் செஸ், டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகளில் ஆர்வமுடன் விளையாடி வருகிறார். கடந்த 7 ஆண்டுகளாக தேக்வாண்டோ பயிற்சி பெற்று வரும் இசையமுதன், மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து தேக்வாண்டோ போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் தேசிய அளவில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற பாரா தேக்வாண்டோ போட்டியில் தமிழக அணி 4 தங்கப் பதக்கம் உட்பட 9 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. இந்த அணியில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இசையமுதன் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார்.
இதன் மூலம் வரும் டிசம்பர் மாதம் மெக்ஸிகோவில் உலக அளவில் நடைபெற உள்ள பாரா தேக்வாண்டோ போட்டியில் இசையமுதன் உட்பட 4 பேர் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இந்தப் போட்டிக்கு செல்வதற்கு பயண செலவு மட்டுமே சுமார் ரூ.3 லட்சம் செலவாகும் நிலையில், குடும்ப பொருளாதாரச் சூழல் காரணமாக போட்டியில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதில் பங்கேற்றால் வெற்றிபெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வாய்ப்புள்ளது. இதனால் இசையமுதன் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் உலக அளவிலான போட்டியில் பங்கேற்க பயணச் செலவு உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் என இசையமுதன், அவரது தாய் ஜெயந்தி ஆகியோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.