தமிழகம்

ஆவடி மாநகராட்சி துணை ஆணையர் சஸ்பெண்ட்: ஓய்வுபெறும் நாளில் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: ஆவடி மாநகராட்சி துணை ஆணையர் விஜயகுமாரியை ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, கடந்த ஆக. 31-ம் தேதி நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: ஆவடி மாநகராட்சி துணை ஆணையர் வி.விஜயகுமாரியின் மீது எழுந்துள்ள கடுமையான குற்றச்சாட்டுகள் மற்றும் முந்தைய குற்றச்சாட்டுகள் மீது நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை கடந்த 22-ம் தேதி பெறப்பட்டது.

அவர் மீது ஊழல் தடுப்பு வழக்கு தொடர்பான விசாரணை இருப்பதால், பொது நலன் கருதி பணியிடை நீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. எனவே, ஆவடி மாநகராட்சி துணை ஆணையர் வி.விஜயகுமாரி உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். அவர், உரிய அதிகாரிகளின் அனுமதியின்றி ஆவடி தலைமையிடத்தை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள விஜயகுமாரி, காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பத்தூரிலும் முன்பு பணியாற்றியவர். அப்போது அவர் மீது பல்வேறு புகார்கள் நகராட்சி நிர்வாகத்துறைக்கு சென்றதன் பெயரில், விசாரணை நடத்தப்பட்டு, நேற்று முன்தினம் அவர் பணி ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT