மாமல்லபுரம்: இரவு நேர துப்புரவுப் பணிகளால் திருக்கழுகுன்றம் நகரச் சாலைகள் தூய்மையாக காணப்படுகின்றன. திருக்கழுகுன்றம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. நகரின் நடுவே பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் உள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். நகரப்பகுதியும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் வேகமாக வளர்ந்து வருகின்றன.
இப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள், குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பையை பேரூராட்சி நிர்வாகம் நாள்தோறும் அகற்றி வருகிறது. எனினும், முக்கிய சாலைகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளும்போது போக்குவரத்து பாதிப்பு மற்றும் நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், வாகன போக்குவரத்து பாதிப்பில்லாமல் துப்புரவுப் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதன்படி நகரின் போக்குவரத்து மிகுந்த சாலைகளான மாமல்லபுரம், கல்பாக்கம், கருங்குழி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மற்றும் பேருந்து நிலையம், பக்தவச்சலேஸ்வரர் கோயில் சந்நிதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக 7 தொகுப்பூதிய பணியாளர்களைக் கொண்டு இரவு நேர தூய்மை பணி நடக்கிறது. இதன்மூலம், நாள்தோறும் 1 டன் மக்கும் குப்பை மற்றும் ஒன்றரை டன் மக்காத குப்பை சேகரிக்கப்படுகிறது. மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தேங்கும் குப்பை உடனடியாக அகறப்படுவதால் தூய்மையாக காட்சியளிக்கின்றன. இதுதவிர காலை நேரங்களில் தூய்மை பணியால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பும் தவிர்க்கப்பட்டுள்ளது.இந்த நடைமுறைக்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: சந்நிதி வீதி உட்பட முக்கிய சாலைகளில் சிதறி கிடக்கும் குப்பையில் உள்ள உணவுகளை உண்பதற்காக, கால்நடைகள் சாலையில் சுற்றி திரியும். இதனால், பள்ளி நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்லும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது, இரவு நேர தூய்மைப் பணியால் அவை தவிர்க்கப்பட்டுள்ளன என்றனர்.
இதுகுறித்து, பேரூராட்சி தலைவர் யுவராஜ் கூறும்போது, "பொதுமக்கள் குப்பையை சாலையில் கொட்டாமல், மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வீட்டின் வெளியே வைத்தால், தூய்மை பணியாளர்கள் எடுத்து செல்வார்கள். மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். படிப்படியாக பிறபகுதிகளிலும் இரவு நேர தூய்மைப் பணித் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.