காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில் இருந்து பழையசீவரம் அருகே பிரிந்து திருமுக்கூடல் செல்லும் சாலையில் பல இடங்களில் மின் விளக்கு வசதி இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். அவர்கள் சாலையில் பயணிக்கும்போது பாதுகாப்பு பிரச்சினைகள் எழுவதுடன், விபத்து உள்ளிட்டவை ஏற்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில் காஞ்சிபுரத்தில் இருந்து 22 கி.மீ தொலைவில் உள்ளது பழையசீவரம் கிராமம். இங்கிருந்து பிரிந்து செல்லும் சாலை திருமுக்கூடல் வழியாக சாலவாக்கம்செல்கிறது. இந்தச் சாலை வழியாக திருமுக்கூடல், அருங்குன்றம், பட்டா, சிறுதாமூர், சித்தாலப்பாக்கம், படூர், பழவேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பொதுமக்கள் செல்கின்றனர்.
இந்தச் சாலையில் இருந்து பினாயூர், அரும்புலியூர் வழியாகவும் ஒரு சாலை செல்கிறது. மொத்தம் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்தச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை வழியாக பல்வேறு கிராமங்களில் இருந்து சென்னை, செங்கல்பட்டு பள்ளிக் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வாலாஜாபாத் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கும் பொதுமக்கள் பலர் வந்து செல்கின்றனர்.
இவர்கள் மட்டுமின்றி ஒரகடம் சிப்காட், மறைமலைநகர் சிப்காட் போன்றபகுதிகளுக்குச் செல்லும் தொழிலாளர்களும் பழையசீவரம் பேருந்து நிறுத்தம்வந்துதான் செல்ல வேண்டும். இதனால்இந்தச் சாலை தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையாக உள்ளது.
மேலும் இந்தச் சாலையைபயன்படுத்தும் பலர் இரவுநேரங்களில் வீடு திரும்புகின்றனர். இதனால் இரவு 11 மணி வரை இந்தச் சாலையில் போக்குவரத்து இருக்கும். பொதுமக்கள் பலர் பேருந்து ஏறுவதற்கு பயன்படுத்தும் பழைய சீவரத்தில் இருந்து திருமுக்கூடலுக்குச் செல்லும் சாலை பிரியும் பிரதான இடத்திலேயே மின் விளக்கு வசதி இல்லை.
இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் பேருந்துகள்,ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களுக்காக இருளில் காத்திருக்கின்றனர். அதேபோல் திருமுக்கூடல் பகுதியில் பாலாற்றின் மேல் உள்ள பாலத்திலும் மின்விளக்கு வசதியில்லை. கல்குவாரி லாரிகள் அதிகம் செல்வதால் இந்த பாலத்தின் மீது அதிக அளவு மண் ஓரங்களில் தேங்கி நிற்கும். வாகனங்கள் செல்லும்போது இவை புழுதிபோல் பறக்கும். இந்த நிலையில் மின் விளக்கு வசதியும இல்லாததால் வாகனங்களில் செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
இதேபோல் திருமுக்கூடல் பள்ளி அருகேயும் மின்விளக்கு இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேடும், பள்ளமான சாலைகள், மண் புழுதி என இரு பிரச்சினை இருக்கும்போது மின்விளக்கு வசதியும் இல்லாததால் பொதுமக்கள் இந்தச் சாலையில் பயணிப்பது என்பதே பெரும் சாவலான காரியமாக மாறுவதுடன் விபத்து உள்ளிட்டவற்றில் சிக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சீத்தாவரம் மோகன் கூறியதாவது: பழையசீவரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திருமுக்கூடல் வழியாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த இடத்தில் உயர் மின்கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என்று பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
குறைந்தபட்சம் மின் விளக்காவது அமைக்கலாம். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதேபோல் திருமுக்கூடல் பாலத்திலும் மின் விளக்குகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இந்தப் பகுதியில் மின் விளக்குகள் அமைப்பதன் மூலம் விபத்துக்களை தடுப்பதுடன், திருட்டு வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோத செயல்களையும் கட்டுப்படுத்த முடியும்.
இருசக்கர வாகனங்களில் இந்தச் சாலையை பயன்படுத்தும் பலர் இரவு நேரங்களில் விழுந்து எழுந்து செல்கின்றனர். திருமுக்கூடல் அரசுப் பள்ளியின் அருகே விபத்து நடைபெற்ற சம்பவங்களும் உள்ளன. எனவே அதிகாரிகள் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜியிடம் கேட்டபோது, கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளில் மின்விளக்கு வசதி அமைக்க அந்த ஊராட்சி மன்றத் தலைவரிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சிகள் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதால் இதனை எங்களால் உடனடியாக செய்ய முடியும்.
ஆனால் திருமுக்கூடல் மேம்பாலம் உள்ளிட்டவை நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு ஊராட்சி நிதியை பயன்படுத்தி நாங்கள் மின்விளக்கு அமைக்க முடியாது. ஆனால் நெடுஞ்சாலைத் துறைக்கு மக்களின் சிரமங்களை நாங்கள் நேரடியாகவோ அல்லது ஊராட்சிகள் மூலம் எடுத்துச் சொல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.