தமிழகம்

ஈசிஆரில் விபத்து எச்சரிக்கை பலகைகள் வைக்க கோரிக்கை

செய்திப்பிரிவு

மாமல்லபுரம்: மாமல்லபுரம்- புதுச்சேரி இடையேயான கிழக்குகடற்கரைச் சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இரவு நேரங்களில் வாகன விபத்துகள் ஏற்படுவதால், விபத்துகளை தடுக்கும் வகையில் எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில், இரண்டாம் கட்டமாக மாமல்லபுரம்- மரக்காணம் வரையிலான ஈசிஆர் சாலையை நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், சாலையில் ஆங்காங்கே சிறு மேம்பாலங்கள் மற்றும் சாலையை உயர்த்தி அமைப்பதற்காக மண் கொட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால், சாலையில் புழுதி பறக்கும் நிலை உள்ளது. மேலும், ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால் அச்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, பக்கவாட்டு பகுதிகளில் தற்காலிக சாலை அமைத்து அதில் வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் முறையான அறிவிப்பு பலகைகள் மற்றும் விபத்து எச்சரிக்கை பலகைகள், இரவு பிரதிபலிப்பான்கள் போன்றவைகள் அமைக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், இரவு நேரங்களில் ஈசிஆரில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் காயமடைந்து வருகின்றனர். அதனால், பெரிய விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் முன்பு விபத்து எச்சரிக்கை மற்றும் மாற்றுச்சாலை அமைக்கப்பட்டுள்ள பகுதி என இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் அறியும் வகையில், பிரதிபலிப்பான்களுடன் கூடிய எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை பணிகளை மேற்கொண்டுள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, ஈசிஆரில் அகலப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. விபத்து எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், வாகன விபத்துகளை தடுப்பதற்காக கூடுதலாக எச்சரிக்கை பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

SCROLL FOR NEXT