மதுரை: கலைஞர் நூற்றாண்டு நூலகம் அருகே உள்ள இரண்டு பேருந்து நிறுத்தங்களில் அரசு பேருந்துகள் நிற்காமல் ஒரு கி.மீ., தாண்டி உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்துவதால், பொதுமக்கள், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை புது நத்தம் சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்த கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளது. இந்த நூலகம் மொத்தம் 6 தளங்களுடன் 3 லட்சம் புத்தங்கங்களுடன் ஆசியாவிலேயே மிக பிரமாண்டமாக ரூ.130 கோடியில் கட்டப்பட்டுள்ளது. தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நூலகத்திற்கு வந்து செல்கிறார்கள். அவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தென் மாவட்ட பள்ளி மாணவர்கள். அவர்கள் ஆர்வமாக கலைஞர் நூலகத்துக்கு வருகிறார்கள். ஆய்வு நோக்கத்துக்காக தமிழகம் முழுவதும் இருந்து கல்லூரி மாணவர்கள் வருகிறார்கள்.
புது நத்தம் சாலையில் இந்த நூலகத்திற்கு முன் உள்ள பாண்டியன் ஹோட்டல் பின்புறம் ஒரு பேருந்து நிறுத்தமும், அதை தாண்டி ரேஸ்கோர்ஸ் காலனி பேருந்து நிறுத்தமும் உள்ளன. மதுரையில் இந்த சாலைகள் வழியாக 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் தினமும் வந்து செல்கிறார்கள். பீபீ குளம், நரிமேடு, கிருஷ்ணாபுரம் காலனி மற்றும் சுற்றுவட்டார குடியிருப்புகளில் வசிக்கும் ஏராளமான மக்களும் இந்த நூலகம் உள்ள பகுதி வழியாக வருகிறார்கள். ஆனால், நூலகம் அமைந்துள்ள பகுதியில் உள்ள இரண்டு பேருந்து நிறுத்தங்களிலும் அரசு பேருந்துகள் நிறுத்தப்படுவதில்லை.
நூலகத்திற்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தாமல் நூலகம் அமைந்துள்ள சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தை தாண்டி நிறுத்தி பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் நூலகத்துக்கு வருபவர்கள் சுமார் 1.கி.மீ., நடந்துவரும் நிலை உள்ளது.
பெண்கள், மாணவர்கள், வயதானவர்களால் நடந்து நூலகத்துக்கு வர முடியவில்லை. தமிழக அரசு மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்த நூலகத்தை திறந்துள்ள நிலையில் அதனை பயன்படுத்த வரும் ஆர்வமுள்ள மக்கள், மாணவர்களை நூலகத்துக்கு அருகே பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தாமல் 1.கி.மீ தாண்டி இறக்கிவிடுவதால் கடும் வெயிலில் அவர்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் நடந்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் நூலகத்துக்கு அருகே பொதுமக்கள், மாணவர்களை ஏற்றி, இறக்கி செல்கிறார்கள். ஷேர் ஆட்டோவில் ஒரு நபருக்கு ரூ.15 வாங்குகிறார்கள். அரசு பேருந்துகளில் இலவச பயணத்தை நம்பி வரும் பெண்கள், மாணவர்கள் நூலகம் அருகே பேருந்தை நிறுத்தாததால் மிகுந்த ஏமாற்றம் அடைகிறார்கள்.
அடுத்து சில வாரங்களில் மழைக்காலம் வருகிறது. அப்போதும் இதே நிலை தொடர்ந்து பள்ளி மாணவர்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மழையில் நனைந்தபடியே நூலகத்திற்கு வரும் அவலம் ஏற்படும். அதனால், மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து கலைஞர் நூலகம் அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களில் அரசு பேருந்துகளை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.