ஓசூர்: ஓசூர் பகுதியில் சளி, காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இதனால், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது சாதாரண காய்ச்சல் தான் என்பதால் அச்சப்படத் தேவையில்லை என மருத்துவ இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஓசூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆண்டு முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவும். ஆனால், நடப்பாண்டில் வெயில் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
இதனிடையே, ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் சுற்று வட்டார பகுதியில் பொதுமக்களுக்கு உடல் வலி, சளி, காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால், ஓசூர் அரசு தலைமை மருத்துவமனைக்குக் குழந்தைகள் மற்றும் முதியவர்கள், பெண்கள் என சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்த மாதிரி சேகரித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், மருத்துவமனையில் ஊசி செலுத்தும் பிரிவு, மருந்து, மாத்திரை வழங்கும் பிரிவு, ரத்தப் பரிசோதனை பிரிவில் நோயாளிகள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலையுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, “பலருக்கும் காய்ச்சல் பரவி வருவதால், டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என அச்சம் உள்ளது. எனவே, கிராமங்களில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும்” என்றனர்.
இது தொடர்பாக இணை இயக்குநர் (மருத்துவம்) பரமசிவம் கூறியதாவது: ஓசூர் பகுதியில் டெங்கு அறிகுறிகள் இல்லை. டெங்கு பரவலை தடுக்க சுகாதார பணியாளர்கள் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளைத் தீவிர பரிசோதனை செய்து கண்காணித்து வருகிறோம்.
அதிக வெயில் மற்றும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை என மாறுபடுவதால், உடல்வலி, சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சாதாரண காய்ச்சல், சளி தான். பொது மக்கள் பயப்படத் தேவை இல்லை. இவ்வாறு அவர் கூறினார். அதிக வெயில் மற்றும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை என மாறுபடுவதால், உடல்வலி, சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.