திருவள்ளூரில் நடந்த அரசு விழாவில் 912 பயனாளிகளுக்கு ரூ35.83 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். உடன் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை செயலாளர் தாரேஷ் அகமது, ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர். 
தமிழகம்

வளர்ச்சி திட்டங்களை மக்களிடம் எடுத்து சென்று அரசுக்கு நற்பெயர் பெற்றுதர வேண்டும்: அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: வளர்ச்சித் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சென்று, அரசுக்கு நற்பெயர் பெற்று தரவேண்டும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம்சார்பில், சென்னை எல்லை சாலை திட்டத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டத்தில், தச்சூர் முதல் திருவள்ளூர் புறவழி சாலை (பிரிவு-2) வரைரூ.1,540 கோடி மதிப்பில் சாலைபணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கரிகலவாக்கம் பகுதியில் நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

ரூ.36 கோடி நலத்திட்ட உதவி: அந்த ஆய்வின்போது, சாலை பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். தொடர்ந்து, கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில், 912 பயனாளிகளுக்கு ரூ35.83 கோடி மதிப்பில், இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பின்னர் பேசியதாவது: மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது அதிகாரிகள் குறித்த காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும். மனிதாபிமானத்தின் அடிப்படையில் வேறு ஏதேனும் ஒரு வகையில் மனுதாரருக்கு உதவ வேண்டும். உழவர் சந்தை திட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்னும் வேகமாக செயல்படுத்த வேண்டும். கும்மிடிப்பூண்டியிலும் உழவர் சந்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிக்கல்வியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியுள்ளது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு மிகச் சிறப்பான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்களை அரசு அதிகாரிகள் மக்களிடம் எடுத்துச் சென்று, அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து அரசுக்கு நற்பெயர் பெற்று தரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளில், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை செயலாளர் தாரேஷ் அகமது, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் என்.ஒ.சுகபுத்ரா, மாவட்டவருவாய் அலுவலர் ராஜ்குமார், திருவள்ளூர் எஸ்.பி.,சீபாஸ்கல்யாண், ஆவடி காவல்ஆணையர் சங்கர், பொறியாளர்கள் இளங்கோ, தட்சிணாமூர்த்தி, எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், ஜெயக்குமார் மற்றும் எம்எல்ஏக்கள் சா.மு.நாசர், வி.ஜி.ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, சந்திரன், சுதர்சனம், டி.ஜெ. கோவிந்தராஜன், கணபதி, துரை சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செயல்வீரர்கள் கூட்டம்: தொடர்ந்து ஆவடியில் நடந்த ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட திமுக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி சிறப்புரையாற்றினார். இதில், திருவள்ளூர் மத்திய, மேற்கு, கிழக்குமாவட்ட திமுக செயலாளர்களான சா.மு.நாசர், எஸ்.சந்திரன், டி.ஜெ.கோவிந்தராஜன் மற்றும் எம்.பி.ஜெகத்ரட்சகன், எம்எல்ஏ கிருஷ்ணசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், திமுக இளைஞரணியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT