தமிழகம்

அடுக்கம் மலைச்சாலையில் உருண்டு விழும் ராட்சத பாறைகள் - வாகனங்கள் செல்ல தடை விதிப்பு

என்.கணேஷ்ராஜ்

பெரியகுளம்: தொடர் மழையால் அடுக்கம் மலைச் சாலையின் பல இடங்களில் ராட்சதப் பாறைகள் உருண்டு விழுகின்றன. இப்பகுதியில் வாகனப் போக்குவரத்துக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 23 கி.மீ. தூரத்தில் அடுக்கம் மலைக் கிராமம் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான கொடைக்கானலையும், தேனி மாவட்ட சுற்றுலாத்தலமான கும்பக்கரை அருவியையும் இந்த மலைச் சாலை இணைக்கிறது. இச்சாலை அடுக்கம் ஊராட்சி, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், கொடைக்கானல் வனத்துறைக்கு உட்பட்ட பகுதிகளைக் கடந்து செல்கிறது.

இந்த வனச்சாலை மூலம் கொய்யாத் தோப்பு, வண்ணான் கரை, சங்கத்துக்குடிசை, பால மலை, ஆதிவாசி குடியிருப்பு, தாமரைக்குளம், சாமக் காட்டுப்பள்ளம், ஆதிதிராவிடர் காலனி மேடு, அடுக்கம் உள்ளிட்ட 9 உட்கிராமங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் பயனடைந்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் இருந்து கொடைக்கானல் செல்வதற்கான முக்கிய மாற்றுப் பாதையாகவும் இது உள்ளது.

இருப்பினும் அகலம் குறைந்த மற்றும் பள்ளத்தாக்கு அதிகம் உள்ள இச்சாலை போக்குவரத்துக்குச் சவாலாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இச்சாலையின் பல இடங்களிலும் மண்சரிவு ஏற்பட்டதுடன் ராட்சதப் பாறைகள் உருண்டு விழுகின்றன.

மண் குவியல்கள் அவ்வப்போது நெடுஞ்சாலைத் துறை மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. இருப்பினும் ராட்சதப் பாறைகள் சாலையின் குறுக்கே விழுவது தொடர்கிறது. தொடர்ந்து மழை பெய்ய வாய்ப் புள்ளதால் பாறைகள் உருண்டு விழும் அபாயமும் உள்ளது. இதையடுத்து, இச்சாலை வழியாக வாகனப் போக்குவரத்துக்குத் தேவ தானப்பட்டி வனச்சரக அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

இது குறித்து வனத் துறையினர் கூறுகையில், "மழை தொடர்வதால் பல இடங்களில் பாறைகள் உருண்டு விழும் அபாயம் உள்ளது. மேலும் சங்கத்துக்குடிசை எனும் இடத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணியும் நடைபெறுகிறது. எனவே, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது" என்றனர். மலைக் கிராம மக்கள் இரு சக்கர வாகனங்களில் இப் பகுதியை சிரமத்துடன் கடந்து சென்று அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT