விழுப்புரம்: தமிழக முதல்வர் ஸ்டாலின் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதியில், இதுவரை தீர்க்கப்படாத 10 முக்கிய கோரிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டுமென கடந்தாண்டு செப்டம்பர் மாதம் எம்எல்ஏக்களுக்கு அறிவுறுத்தினார்.
அதன்பேரில், விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியின் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் சி.சிவக்குமார்,கடந்தாண்டு செப்டம்பர் 6-ம் தேதி அப்போதைய ஆட்சியர் மோகனிடம் தனது தொகுதியில் உள்ள முக்கிய கோரிக்கைகளை தொகுத்து, மனுவாக அளித்தார். ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் மனுக்கள் மீதான நடவடிக்கை எந்த அளவுக்கு உள்ளது என சிவக்குமார் எம்எல்ஏவிடம் கேட்டபோது அவர் தெரிவித்தது:
10 முக்கிய கோரிக்கைகள் என்று இல்லை; தொகுதி மக்களால் நீண்ட காலமாக கேட்கப்பட்டு வரும் கோரிக்கைகள் முறையாக தொகுக்கப்பட்டு முதல்வர் கூறியபடி ஆட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மயிலம் தொகுதியில் அரசு கல்லூரி, அரசு தொழில்நுட்பக் கல்லூரி அமைத்து தர வேண்டும், ரெட்டணையில் தீயணைப்பு நிலையம், வல்லத்தில் காவல் நிலையம் அமைத்து தர வேண்டும்.
ரெட்டணையில் வணிக வளாகத்துடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். மயிலத்தை தலைமை இடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்க வேண்டும். வட சிறுவளூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கித் தர வேண்டும். அதுபோல் மயிலம் மற்றும் ரெட்டணையை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.
வல்லம் ஒன்றியத்தில் உள்ள செ.கொத்தமங்கலம் - அணிலாடி, மேல்களவாய் - ஈச்சூர், இல்லோடு- வெடால், நாட்டார்மங்கலம் - தொண்டூர், கீழையூர் - ரெட்டணை, தளவாளப்பட்டு - தென்புத்தூர் ஆகிய தரைப்பாலங்களையும், மயிலம், ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள வீடூர் அணைக்கட்டு, தென் ஆலப்பாக்கம் - பாதிராப்புலியூர், கொடியம் - அம்மனம்பாக்கம், தாதாபுரம் - அம்மனம்பாக்கம் ஆகிய தரைப்பாலங்களையும் உயர்மட்ட பாலங்களாக மாற்றி அமைக்க வேண்டும்.
விவசாயிகளின் சிரமங்களை தவிர்க்கும் வகையில் ஜெயங்கொண்டான் முதல் பேரணி வரையுள்ள ஒருவழிச் சாலையை இருவழி அகலச்சாலையாகவும், நாட்டார்மங்கலம் - தொண்டூர், பேரணி - பெரியதச்சூர், செண்டூர் - மயிலம் ஆகிய ஒருவழிச் சாலையை இருவழி சாலையாகவும் மாற்றித்தர வேண்டும்.
மயிலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 100 படுக்கைகள் கொண்ட வட்டார மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். வீடூர் அரசு துணை சுகாதார நிலையத்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும், அதுபோல் ஆலகிராமம், பென்னகர் ஆகிய இடங்களில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நெகனூர், மரூர், குறிஞ்சிப்பை, கடம்பூர் ஆகிய கிராமங்களில் துணை சுகாதார நிலையங்கள் அமைக்க வேண்டும்.
வீடூர் அணையில் சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான படகு சவாரி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். நாணல்மேடு தொண்டி ஆற்றின் குறுக்கேயும், மொடையூர் - மணியம்பட்டு சங்கரா பரணி ஆற்றின் குறுக்கேயும் தடுப்பணை அமைக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில், ஜெயங்கொண்டான் முதல் பேரணிவரையுள்ள ஒருவழிச்சாலையை இருவழி அகலச்சாலையாகவும், நாட்டார்மங்கலம் - தொண்டூர், பேரணி - பெரியதச்சூர், செண்டூர் - மயிலம் ஆகிய ஒருவழிச் சாலையை இருவழி சாலையாகவும் மாற்றித்தர வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற அரசால் நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதைத் தாண்டிஎந்த ஒரு கோரிக்கைக்காகவும் அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. தொகுதி மக்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட 95 சதவீத கோரிக்கைகள் அப்படியே முடங்கி கிடக்கின்றன என்று தெரிவித்தார்.